இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடிய ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி கார், ஜீப் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருக்கும். அந்த அந்த குறிப்பிட்ட வாகனத்திற்கு என ஃபாஸ்டேக் கணக்கு தொடங்கப்பட்டு அந்த வாகனம் சுங்கச்சாவடிகளை கடக்கும் போது தானாகவே அது இணைக்கப்பட்டிருக்கக் கூடிய வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணம் என்பது எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் மத்திய அரசு தரவுகளின் படி இதுவரை இந்தியாவில் 11.86 கோடி ஃபாஸ்டேக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 6 கோடி ஃபாஸ்டேக் கணக்குகள் பயன்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் சுங்க கட்டணத்தில் 98 சதவீதம் ஃபாஸ்டேக் நடைமுறையில் தான் வசூல் செய்யப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய 66 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக தி ஹிந்து செய்தி குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 77 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 77 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன, இதில் 66 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது.
5 முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜீப், கார் போன்ற வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தை விட 10 முதல் 40 ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படும். அதேபோல லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு 50 முதல் 200 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.
மொத்த விலை பணவீக்க குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணம் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு முதலில் தமிழ்நாட்டில் 66 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல மாதாந்திர ஃபாஸ்டேக் பாஸ் கட்டணமும் 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்திற்கான ஃபாஸ்டேக் பாஸ் கட்டணமும் வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்படுகிறது. இதுநாள் வரை 3000 ரூபாய் செலுத்தி ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் பெற்றவர்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து 3,075 ரூபாயாக கட்டணம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications