சென்னை: தமிழ்நாட்டில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் நம்முடைய குடும்பம் பெறும் நன்மைகள் மாறுபடும். தற்போது குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் நிலையில், அந்த ஸ்மார்ட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்பதைப் பார்ப்போம்.
முன்பு வழக்கத்தில் இருந்த ரேஷன் கார்டுகளில், அதன் பின்புறம் ரேஷன் கார்டின் குறியீடு இருக்கும். தற்போது உள்ள ஸ்மார்ட் கார்டுகளில், அது முதல் பக்கத்தில் இருக்கிறது. குறியீடுகளான PHH, PHH - AAY, NPHH, NPHH-S போன்ற வகைகள் உள்ளன அந்தக் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்பதைப் பார்ப்போம்

PHH (Priority Household): இந்த அட்டை, பொருளாதார நிலையில் மிகவும் குறைவான குடும்பங்களுக்கு வழங்கப்படும். இந்த அட்டைதாரர்கள் தேசிய உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறப்புப் பொருட்களை, குறைந்த விலையில் பெற முடியும். இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மாதம் 8 கிலோ வரை அரிசி பெற்றுக் கொள்ளலாம்
PHH - AAY (Antyodaya Anna Yojana): வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த வகை அட்டை வழங்கப்படுகிறது. குறிப்பாக, அன்றாட சாப்பாடு கிடைப்பதற்கு கஷ்டப்படும் குடும்பங்கள் இந்த ரேஷன் கார்டை பெறலாம். இந்த அட்டைதாரர்கள் மிகக் குறைந்த விலையில் மாதத்திற்கு 35 கிலோ அரிசி மற்றும் உணவுப் பொருள்களை அரசின் மூலம் பெறுகின்றனர். இது அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
NPHH (Non-Priority Household): இந்த வகை ரேஷன் அட்டை, குறைந்த வருமானம் அல்லது குறைந்த பொருளாதார நிலை இல்லாத குடும்பங்களுக்கு வழங்கப்படும். இந்த அட்டைதாரர்கள் மாநில அரசின் சில நலவாரிய திட்டங்களை மட்டும் பெறுவார்கள். இவர்கள் அரசு தரும் அனைத்து ரேஷன் கார்டு பொருள்களையும் பெற முடியும்.
NPHH-S (Non-Priority Household - State Subsidy): இந்த வகை ரேஷன் அட்டை, குறைந்த வருமானம் அல்லது குறைந்த பொருளாதார நிலை இல்லாத குடும்பங்களுக்கு வழங்கப்படும். இந்த ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்கள் அரிசியைத் தவிர பிற பொருள்களைப் பெற முடியும்.
NPHH-NC: இந்த வகை ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்கள், நியாய விலைக் கடைகளில் கிடைக்கும், எந்த ஒரு பொருளையும் வாங்க முடியாது. தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தப்படும் அரசாங்க ஆவணமாக மட்டுமே வைத்திருக்க முடியும்.
இந்த ரேஷன் அட்டை வகைகளின் மூலம், அரசு மக்களின் பொருளாதார நிலையை புரிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவுகிறது. இவை குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுகின்றன.


Click it and Unblock the Notifications