ஒவ்வொரு புது ஆண்டும் புது தொடக்கத்திற்கான வாய்ப்பு தான். இதுநாள் வரை நான் முதலீடு செய்தது இல்லை, சேமிப்பே இல்லை ,வாழ்க்கை தேக்கமடைந்து விட்டது என குறைபட்டு கொள்பவர்களுக்கு நாளைய தமிழ் புத்தாண்டு பல புது வாய்ப்புகளை ஏற்படுத்தி தர போகிறது.
நாளை சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் நாள்காட்டியின் படி சூரிய உதயத்திற்குப் பிறகு, சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு வரும் சங்கராந்தி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஒரு வேளை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சங்கராந்தி வந்தால் அடுத்த நாள் புத்தாண்டாக கொண்டாடப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது.

புதிய எதிர்பார்ப்புகளுடன் நம்பிக்கையோடும் தொடங்கும் இந்த நாளில் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் செல்வமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் கோயில்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இதனை அடுத்து பூஜைகள் செய்யப்படும், வீட்டிலேயே கனி காணுதல் போன்ற பாரம்பரிய பூஜைகளும் நடத்தப்படும்.
ஸ்ரீ பராபவ ஆண்டு நாளை பிறக்கிறது, காலை 9:30 மணி அளவில் தான் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு தை மாதமா அல்லது சித்திரை ஒன்றா என்ற குழப்பம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் சித்திரை ஒன்றாம் தேதி தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். புதிய தொழில் முயற்சி தொடங்குவதற்கும் , புது தொடக்கங்களுக்கும் இந்த நாள் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது.
நிதி ரீதியாக சில மாற்றங்களை நாளைய தினத்திலிருந்து நீங்கள் தொடங்கினால் அடுத்த புத்தாண்டுக்குள் உங்களுடைய வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றம் காணும். அந்த வகையில் உங்களுடைய மாதாந்திர வருமானம் என்ன, எவ்வளவு தொகை செலவு செய்கிறீர்கள் அதில் எவ்வளவு சேமிப்பு செய்கிறீர்கள் என அறிந்து கொள்ள பட்ஜெட் போடும் பழக்கத்தை நாளை முதல் தொடங்குங்கள். இந்த புத்தாண்டில் நீங்கள் தொடங்கக்கூடிய இந்த ஒரு பழக்கம் அடுத்த புத்தாண்டுக்குள் உங்களை நிதி ரீதியாக வலுப்படுத்தும்.
இதுவரை சேமித்ததே இல்லை, முதலீடே செய்ததில்லை என்பவர்களும் நாளை முதல் அதற்கான அடித்தளத்தை போடலாம். பட்ஜெட் போடும் பழக்கத்தின் மூலம் உங்களிடம் வருமானம் செலவு போக எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பது தெரிய வரும். அதனை முதலீடு செய்ய தொடங்கலாம். முதலில் எஸ்ஐபி போன்ற திட்டங்கள் அல்லது போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களில் சிறுக சிறுக பணம் போட தொடங்குங்கள்.
அடுத்ததாக உங்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை என்றால் முதலில் அதற்கான வேலைகளை தொடங்குங்கள். மருத்துவ காப்பீடு, மருத்துவ அவசர தேவைகளின் போது உங்களுக்கு நிதி ரீதியாக பெரிய பலத்தை தரும். தற்போது ஏஐ வளர்ச்சியால் பணி நீக்கங்கள் சாதாரணமாகிவிட்ட நிலையில் உங்களின் திறன் வளர்ச்சிக்கான வகுப்புகளில் சேருங்கள். திறன் வளர்ப்பில் செய்யும் முதலீடு சம்பளத்தை அதிகரிக்கும் பதவி உயர்வுக்கும் வழி வகை செய்யும். இந்த தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாக அனைவருக்கும் மலரட்டும்.


Click it and Unblock the Notifications