தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாநிலத்தின் ஐடி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில், அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அலுவலகத்தைத் திறந்து வருகிறது. இதேபோல் ஐடி துறையின் வளர்ச்சியை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்குக் கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கிறார் அமைச்சர்.
இந்த நிலையில் CII அமைப்பின் ஐசிடி கான்பிரென்ஸ் கனெக்ட் 2023 நிகழ்ச்சியில் பேசிய போது பட்டதாரி மாணவர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரையில் பல தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் முக்கியமான விஷயத்தை அறிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது ஒவ்வொரு மாதமும் 10000 கூடுதல் வேலைவாய்ப்புகள் ஐடி துறையில் உருவாக்கப்பட்ட வருகிறது, இந்த நிலையில் மாநில அரசு மாதம் 20000 முதல் 25000 வரையிலான ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பணிகளைத் தீவிரமாகச் செய்து வருவதாகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
உண்மையில் பெங்களூர் போன்ற நகரங்களை ஒப்பிடுகையில் நாம் பின்தங்கி தான் உள்ளோம், ஆனால் ஐடி சேவை துறையில் தற்போது இருக்கும் நிலையற்ற தன்மையை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கனெக்ட் 2023 கூட்டத்தில் பேசினார்.
தமிழ்நாடு ஐடி துறையின் தற்போது முன்னுரிமை அளிக்கப்படும் முக்கியமான விஷயங்களில் அதிவேக இணைப்பு, அரசு சேவைகளில் டிஜிட்டல்மயமாக்கல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் இன்னோவேஷன்-க்கான சூழ்நிலையை உருவாக்குதல் ஆகியவற்றை முன்வைத்தார்.
மேலும் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பார்த்நெட் திட்டம் விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டால் அடுத்த வருடம் இதேநேரம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 MBPS இண்டர்நெட் இணைப்பு இருக்கும் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபி-யில் சுமார் 15 சதவீதம் ஐடி துறை பங்கு வகிக்கிறது, இந்த நிலையில் இத்துறையை வேகமாக விரிவாக்கம் செய்வது மூலம் இத்துறையின் வளர்ச்சி வாயிலாகத் தமிழ்நாட்டின் ஜிடிபி 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டும் என எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகத் தலைவர் எஸ் அருண் ராஜ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications