தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் Live : வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்!! 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குப்பதிவு!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம்.
பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களிப்பதை காணமுடிகிறது இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி , தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் வேட்பாளர்களாக திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Apr 23, 2026, 9:45 am IST
9 மணி வரை 17.69% வாக்குப்பதிவு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிப்பு.
Apr 23, 2026, 9:14 am IST
முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தார்
சென்னை SIET கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்கா உடன் வந்து வாக்களித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாக்கினை பதிவு செய்தார்.
Apr 23, 2026, 8:52 am IST
நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.
Apr 23, 2026, 8:43 am IST
தவெக தலைவர் விஜய் வாக்களித்தார்
தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினார். அவரது வருகையின் போது ஏராளமானோர் திரண்டதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Apr 23, 2026, 8:09 am IST
குஷ்பூ, சுந்தர்.சி சென்னையில் வாக்களித்தனர்
இயக்குநரும் மதுரை மத்திய தொகுதிக்கான என்டிஏ வேட்பாளருமான சுந்தர்.சி மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது மனைவி குஷ்பு மற்றும் மகளுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
Apr 23, 2026, 7:55 am IST
அஜீத், சீமான் முதல் ஆளாக வந்து வாக்குப்பதிவு
,
நடிகர் அஜீத் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வந்து வாக்கு செலுத்தினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீலாங்கரை தொகுதியில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
Share This Article
English summary
tamilnadu assembly election live updates : Voting begins as people are eagerly casting their vote
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - Tamilnadu Assembly election : Over 5.73 crore voters will decide the electoral fate of 4,023 candidates in the fray for the crucial Tamil Nadu Assembly elections, amid tight security.
Story first published: Thursday, April 23, 2026, 7:52 [IST]