தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆலைகள், நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் போன்றவற்றால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. இதனால் பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்கப்படுகிறது.
அதேசமயம் மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மின் வாரியம் மேற்கொண்டு வருகிறது. வட சென்னையில் அத்திப்பட்டில் மின் வாரியத்துக்கு, தலா 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம் உள்ளது.

அந்த மின் நிலையங்களுக்கு அருகில், 2016 ஜனவரியில் 800 மெகா வாட் திறனுடன் புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை தொடங்கியது, இது 2019ல் செயல்பாட்டுக்கு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகள் தாமதமாகி வந்தது.
இந்நிலையில் இந்த புதிய அனல் மின் நிலையத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த திட்டத்தில் நாங்கள் கிட்டத்தட்ட ரூ.6,500 கோடி முதலீடு செய்துள்ளோம்.
இத்திட்டம் மூலம் எதிர்வரும் கோடை காலத்தில் இது ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தேதிக்காக காத்திருக்கிறோம்.
ஆரம்பத்தில் இதனை 2019ல் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப தடைகள் மற்றும் கோவிட்-19 போன்றவை தாமதங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் ஆலை தற்போது முழுமையாக மின் உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளது.
தெலங்கானாவில் உள்ள சிங்கரேணி சுரங்கள், ஒடிசாவில் உள்ள தால்சார் மற்றும் ஐபி பள்ளத்தாக்கு சுரங்கங்களுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் அங்கு இருந்து நிலக்கரி பெறப்படுகிறது. வட சென்னையில் லோடிங் வசதிக்காக வேகன் அமைப்பதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்.
அதேசமயம், ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கூடுதல் நிலக்கரியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 6 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் கார்ப்பரேஷன் ஒப்புதல் பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதால், புதிய 800 மெகா வாட் ஆலையை வெற்றிகரமாக இயக்குவது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம் என்று தெரிவித்தார். இது செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் மிகப்பெரிய அனல் மின் நிலையாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications