தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், 'இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்' என்றார்.
அப்போது, மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், முதற்கட்டமாக சென்னை அருகே உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் 2000 ஏக்கரில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் ஐடி பார்க்குகள், பன்னடடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சென்னை மாநகரை இந்த புதிய நகரத்துடன் இணைத்திட புதிய சாலைகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேளச்சேரி பிரதான சாலை - குருநானக் கல்லூரி சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்க ரூ.310 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும்.; இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீர், மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதி, தலா 1000 பேர் தங்கலாம். 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் மேலும் 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.


Click it and Unblock the Notifications