தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025-26 ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. இந்த அறிக்கை, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டாலின் அரசு இன்று இடைக்கால பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள வேளையில் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கியமான விஷயம் என்ன..?

1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
தமிழ்நாடு 2031-ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பு உள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் பதிவான 16% வளர்ச்சியைத் தொடர்ந்தால், ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ஆண்டுக்கு 2% வீதத்தில் உயரும் என்ற கணிப்புடன் இந்த இலக்கை அடையலாம் என கணக்கிட்டு உள்ளது.
மேலும் டாலர் மதிப்பு ஆண்டுக்கு 3.5% வீதத்தில் உயர்ந்தால், இலக்கு ஒரு ஆண்டு தாமதமாகலாம் என்று தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-26 தெரிவிக்கிறது. இந்த ஆய்வறிக்கை மாநில திட்டக் கமிஷன் (State Planning Commission) தயாரித்தது. நிதித் துறை மற்றும் பல்வேறு நிபுணர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. DMK அரசின் இரண்டாவது பொருளாதார ஆய்வறிக்கை இது.
தனிநபர் வருமானம்
2024-25-இல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3.62 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியான ரூ.2.05 லட்சத்தை விட 1.77 மடங்கு அதிகம். இதனால், தமிழ்நாடு இந்தியாவில் அதிக தனிநபர் வருமானத்தை கொண்ட மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியா ஜிடிபி
இந்தியாவின் நிலப்பரப்பில் 4% மற்றும் மக்கள் தொகையில் 6% மட்டுமே தமிழ்நாடு கொண்டிருந்தாலும், தேசிய ஜிடிபியில் 9.4% பங்களிப்பு செய்துள்ளது. மேலும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) தற்போதைய நாணய மதிப்பில் ரூ.31.19 லட்சம் கோடியை எட்டியது. பெயரளவு வளர்ச்சி விகிதம் (nominal growth rate) 16% ஆக உள்ளது, உண்மை வளர்ச்சி (Real growth rate) 11.2% ஆக உள்ளது. இந்தியாவின் பெரிய பொருளாதாரம் கொண்ட டாப் மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகம்.
பணவீக்கம் குறைந்தது
தமிழ்நாட்டில் நகர்ப்புற பணவீக்கம் 2023-24-இல் 5.2%-இலிருந்து 2025-26-இல் 2.5%-ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புற பணவீக்கம் 5.8%-இலிருந்து 2.1%-ஆகக் குறைந்தது. உணவுப் பணவீக்கம் -0.003% ஆக மிகக் குறைவாக உள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகள் பிரிவில் பணவீக்கம் 1.3% உள்ளது.
சமூக நலச் துறை செலவு அதிகரிப்பு
தமிழ்நாடு அரசு மக்கள் நல திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2021-22-இல் ரூ.1,13,268 கோடியாக இருந்தது 2025-26-இல் ரூ.1,57,864 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் முக்கியமாக நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றவை மக்களின் திறனை வளர்த்து, குடும்ப ஆபத்துகளைக் குறைத்து, எதிர்கால நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. பெரிய அளவிலான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற புதுப்பிப்பு திட்டங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications