தமிழ்நாட்டில் இன்று முக்கிய நிகழ்வாக தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில், முக்கிய மாற்றம் நடைபெறவுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் மகனான, தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க இளைஞர் அணி செயலாளராக இருக்கும் நிலையில், கடந்த சட்டசபை தொகுதியில் சேப்பாக்கம் தொகுதியில் வென்று எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தமிழ்நாட்டு அமைச்சரவையில் அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில், இன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள் நியமித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதான உதயநிதி, 2019 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தபோது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் அறிமுகமானார். 2022 முதல் அவர் வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2011 வரை மறைந்த தந்தை கருணாநிதியின் ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த உதயநிதி துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் கட்சியில் உதயநிதி பெற்ற நான்காவது பதவி உயர்வு இதுவாகும். 2019ல் இளைஞரணி செயலாளர். 2021-ல் எம்.எல்.ஏ மற்றும் 2022 அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு இப்போது துணை முதல்வர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அதேபோல், கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்த அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 3 புதிய அமைச்சர்கள் இன்று (செப்.29) மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர்.
இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூத்த அமைச்சர்களுடன் சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவீட்டில், "நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
'துணை முதலமைச்சர்' என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications