தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தமிழக அரசு சார்பில் வருடா வருடம் பொங்கலுக்கு பல்வேறு வகையான பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டை வைத்துள்ள மக்களுக்கு பொங்கல் வைக்க தேவையான அவசியமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், வரும் ஜனவரி 2025 ஆம் ஆண்டிற்கான தைப் பொங்கலுக்கான பரிசுத் தொகுப்புகள் வழங்க அரசு தயாராக உள்ளது. தற்போது இதற்கான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு அதே பொருள்கள் வழங்கப்படுமா அல்லது அவற்றில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த முறை மக்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படும் பரிசுத்தொகுப்பில் ஒருவருக்கு ரொக்கமாக எவ்வளவு கொடுக்கப்படும் என்ற கேள்விகளுக்கு தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் நிகழ்ச்சியில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் பொங்கல் பரிசு பொருட்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அதில், முதல்வர் அறிவிக்கக்கூடிய பொங்கல் தொகுப்பை வரும் வாரத்தில் முதல்வர் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.
அதேபோல், கரும்பு கொள்முதல் தொடர்பாக வேளாண் துறையுடன் சேர்ந்து அனைத்து ஏற்பாடும் மேற்கொண்டு வருவதாகவும், கூடுதல் பொருட்கள் என்பது கொள்கை ரீதியிலான முடிவு தான் என்று அமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டதாகவும், முதல்வர் அறிவிக்கக்கூடிய அறிவிப்புகளை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளதாகவும், அதில், தான் எப்போதும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறையில் முழுவீச்சில் கவனம் செலுத்துவதாகவும், முதல்வர் சொல்வது போல் உணவை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பது மட்டும் நமது பணி அல்ல. அதனை பாதுகாப்பதும் நமது பணி என்ற வகையில் தமிழ்நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் என்ற மத்திய அரசு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துகிறோம் என்றும் இதில், 1.14 கோடி பேர் பயன்பெறுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும்,1.04 கோடி பேருக்கு இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை எல்லாம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு துறையில் ஸ்பெஷல் பிடிஎஸ் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. தமிழகத்தில் தற்போது 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளதாகவும், அதில் 1.54 கோடி புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications