தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்க்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதிதாக 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான "தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி" என்ற சிறப்பு திட்டத்தினை இன்று (ஏப்ரல் 30) வெளியிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த திட்டத்தின் அம்சங்கள் வெளியாகியுள்ளன.

மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024ஐ அறிமுகப்படுத்தியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்திட வழிவகுத்துள்ள நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழல் அமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் (Electronics Component Manufacturing Scheme) என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை தமிழகம் நோக்கி ஈர்த்திடும் வகையில், மத்திய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசும் ஊக்கத் தொகை வழங்கிட இந்த திட்டம் வழிவகை செய்யும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 30,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 60,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பலதுறைகளிலும் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை பெருக்கி வருகிறது. இதற்காகவே உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த போது பல்வேறு முன்னணி நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் தான் ஃபாக்ஸ் கான் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனம் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. ஓலா, ஏதர் உள்ளிட்ட மின்சார வாகன நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்வேறு கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களின் மையமாக தமிழ்நாடு இருக்கிறது. இது தவிர மின்னணு சாதனங்கள் மற்றும் செமி கண்டக்டர் பிரிவுகள், காலணி உற்பத்தி ஆகிய பிரிவுகளிலும் தமிழ்நாட்டை உயரத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பல சிறப்பு கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications