பனப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் குழுமம் தமிழ்நாட்டில் புதிய வாகன உற்பத்தி ஆலையை நிறுவுவது என தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் புதிய சிப்காட் பகுதியில் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை அமையும் என அறிவிக்கப்பட்டது.
இந்த டாடா மோட்டார்ஸ் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5000 பேருக்கு நேரடியாகவும், 15000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9,000 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது . இதன்படி பனப்பாக்கத்தில் உள்ள புதிய சிப்காட் வளாகத்தில் தோல் தொழில் அல்லாத முதல் தொழிற்சாலையாக டாடா மோட்டார்ஸ் ஆலை இருக்கும்.

470 ஏக்கர் பரப்பளவில் ஆலை அமைக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் இணைந்து மின்சார கார்களை இங்கே தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள ஆலை மின்சார கார் உற்பத்தியின் முக்கிய மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே தயாரிக்கப்படும் கார்கள் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
முன்னதாக ஆலைக்கு அடிக்கல் நாட்டும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மூத்த அமைச்சர் துரைமுருகன், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ,தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் டாடா சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் மட்டுமல்ல சர்வதேச அளவில் செயல்படும் நிறுவனங்களுக்கும் முதலீடு என்ற உடன் அவர்களின் முதன்மை விருப்பமாக இருப்பது தமிழ்நாடு தான் என பெருமையாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் என்.சந்திரசேகரன் அவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து சர்வதேச அளவிலான நிறுவனத்திற்கு தலைமை வகிக்கும் சந்திரசேகரன் நமது மாநிலத்தின் பெருமை என கூறினார்.
டாடா மோட்டார்ஸ் ஆலையை தொடர்ந்து பனப்பாக்கம் சிப்காட்டில் அமைய இருக்கும் மெகா காலணி ஆலைக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகப் போகின்றன.
Written by: Devika


Click it and Unblock the Notifications