இந்தியாவில் கல்வி, தொழிற்துறை, உற்பத்தி, ஏற்றுமதி, சேவை துறை, வேலைவாய்ப்பு என அனைத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தொழிற்துறை முதலீட்டையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான திட்டத்துடன் சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றம் நடந்தது.

இந்த மாற்றத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தொழிற்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா, நிதியமைச்சகம் மற்றும் மனிதவள துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளதன் மூலம் அடுத்த 2 வருடத்தில் தமிழ்நாட்டின் முதலீட்டு மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் முக்கியமான நோக்கமே தமிழக அரசு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பது தான்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், புதிய முதலீடுகளை அறிவிக்கவும் உலக நாடுகளின் முன்னணி கார்ப்பரேட் நிறுவவன தலைவர்களை அழைப்பது தான் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தின் முக்கிய காரணமாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 4 நாட்களுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவும், அதற்கான அடித்தளமிட்டது தமிழ்நாடு தொழில் துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உருவாக்கிய Guidance Bureau தான். இந்த நிலையில் முதல்வருடன் இவ்விரு பிரிவின் முக்கிய தலைவர்களும் செல்ல உள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பணத்தின் மூலம் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பிரிவு நிறுவனங்கள் முதல் முன்னணி முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்கவும், முதலீடுகள் ஈர்க்கப்படும் என நம்பப்படுகிறது.

இதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை உற்பத்தி துறைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து துறைகளுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிஸ்கோ, அதன் முக்கிய இரு தயாரிப்பு பிரிவுகளை தமிழ்நாட்டில் அமைக்கவும், இதற்காக 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்யவும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் இணைய சேவைகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில் இந்தியாவில் நெட்வொர்க் கருவிகளை உருவாக்கும் திட்டத்தை சென்னையில் அமைக்க சிஸ்கோ அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் ஹூண்டாய் 20000 கோடி ரூபாய் முதலீடு, sunroof தயாரிக்க நெதர்லாந்து நாட்டின் Inalfa Roof Systems 170 கோடி ரூபாய், Mitsubishi உடனான ஒப்பந்தம் என கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டு தொழிற்துறையும் முதலீட்டு சந்தையும் பரபரப்பாகவே உள்ளது.
மே 2021 முதல் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு சுமார் 2.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 70 சதவீத நிறுவனங்கள் கட்டுமான அல்லது உற்பத்தி பணிகளை துவங்கியுள்ளது. மீதமுள்ள 30 சதவீத நிறுவனங்கள் நிலத்தை தேடும் பணியில் உள்ளன.


Click it and Unblock the Notifications