தூத்துக்குடி: உலக அளவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இந்தியா எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது.
இந்திய எலக்ட்ரிக் கார் சந்தை: அண்மையில் கூட எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய முதல் ஷோருமை திறந்தது. இந்திய மின்சார வாகன சந்தையில் டெஸ்லாவுக்கு முன்பே களமிறங்கியது தான் வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம். உலக அளவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இந்நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னுடைய எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. ஆலை கட்டமைப்பு பணிகள் தீவிரமடைந்து இருக்கக்கூடிய நிலையில் , ஆலை எப்போது திறக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை: தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை வரும் 31ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைப்பார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ஆலை திறக்கப்படுவது தமிழ்நாட்டுக்கே பெருமை மிகு தருணம் என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்திருக்கிறார். வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 15 மாதங்களில் ஆலை திறந்து பயன்பாட்டுக்கு வருவதாக குறிப்பிட்டிருக்கும் அவர் தமிழ்நாடு அரசு வெறும் அறிவிப்புகளாக மற்றும் இல்லாமல் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறது என்பதை இது உணர்த்துகிறது என கூறி இருக்கிறார்.

எவ்வளவு முதலீடு: கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மிக வேகமாக பணிகள் நடத்தப்பட்டு தற்போது ஆலையே திறக்கப்பட இருக்கிறது . வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் 16,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது, இந்த ஆலை மூலம் 3500 வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.
சென்னையில் ஷோரூம்: முதல் கட்டமாக ஆலையிலிருந்து ஆண்டுக்கு 50,000 எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. தூத்துக்குடி துறைமுகம் அருகிலேயே இருப்பதால் இங்கே உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் எளிமையானதாக மாறியிருக்கிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஜூலை 15ஆம் தேதியே தங்களுடைய ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்களான VF 6, VF7 கார்களுக்கான புக்கிங் தொடங்கி விட்டது . சென்னையிலும் தன்னுடைய முதல் ஷோரூமை திறந்து இருக்கிறது.
விற்பனைக்கு பிந்தைய சேவை: வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே தங்கள் கார்களின் விற்பனைக்கு பிந்தைய சேவைகளுக்காக மைடிவிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது தவிர இந்தியாவின் பிரதான நகரங்களில் எல்லாம் வாகனத்தை டெலிவரி செய்ய ஏதுவாக டீலர்களிடமும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்தியாவில் வின்ஃபாஸ்ட், டெஸ்லா மற்றும் பிஒய்டி கார்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications