தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து , நேற்று முதலே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மார்ச் 15ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். எனவே அடுத்த 50 நாட்களுக்கும் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களை வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இல்லை என்றால் கையில் இருக்கும் ரொக்கத்தை இழக்க நேரிடலாம்.

பறக்கும் படை: தேர்தல் காலத்தில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும் கருப்பு பணம் புழக்கத்தை தடுக்கவும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் பறக்கு படையினர் மூலம் தீவிர சோதனைகளை நடத்துகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் வாகன சோதனைகள் தீவிரமடைந்துள்ளன.
எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம்?: பொதுமக்கள் கைகளில் ரூ.50000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக கொண்டு செல்ல முடியும். அதற்கு மேல் இருக்கும் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்களை காட்ட வேண்டும். இல்லை என்றால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துவிடுவார்கள். இது திருமணத்திற்கு நகை வாங்க செல்பவர்கள், மண்டபத்திற்கு முன்பணம் கொடுக்க செல்பவர்கள், சொத்து வீடு வாங்க முன்பணம் செலுத்துபவர்கள், வியாபாரத்திற்கு பணம் கொண்டு செல்பவர்கள் என பலரையும் நேரடியாகவே பாதிக்க செய்கிறது.
பணம் பறிமுதல்: இந்நிலையில் தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு விளக்கம் தந்துள்ளது. தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டியில் பொதுமக்கள் உரிய ஆவணங்களை காட்டினால் அதிகாரிகள் உடனே பணம் மற்றும் பொருட்களை ஒப்படைத்து விடுவார்கள் என கூறியுள்ளார். அதே போல பொதுமக்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

ஐடி ஆய்வுக்கு செல்லுமா?: எனவே 50000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்களை காட்ட வேண்டும். ரூ.10 லட்சம் ரூபாய் வரை ஆவணங்களை காட்டினாலே அதிகாரிகள் விட்டுவிடுவார்கள். அதுவே 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் அது வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் தான் பணம் ஒப்படைக்கப்படும்.
என்னென்ன ஆவணம் ஏற்கப்படும்: பொதுமக்கள் மே 6ஆம் தேதி வரை முடிந்த அளவு ரொக்க பணத்தை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் பணம் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம். வங்கியில் இருந்து பணம் எடுத்திருந்தால் உங்களின் வங்கி கணக்கு அறிக்கையை ஆவணமாக காட்டலாம். அதுவே ஏடிஎம்மில் எடுத்திருந்தால் அதற்கான ஏடிஎம் ரசீது அல்லது போனில் வந்திருக்கும் மெசேஜை ஆதாரமாக காட்டலாம்.
திருமண நிகழ்வுக்கு பணம் கொண்டு செல்பவர்கள் திருமண பத்திரிக்கையை ஆவணமாக காட்டலாம். அதே போல வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்கான ஜிஎஸ்டி சான்றிதழ்கள், இன்வாய்ஸ் பில்கள் ஆகியவற்றை ஆவணமாக சமர்ப்பிக்கலாம், என்கிறது தேர்தல் ஆணையம்.
தற்போது ஒரு பவுன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் கூட மக்கள் 1.50 லட்சம் வரை பணம் கொண்டு செல்ல வேண்டி இருக்கும். ஆனால் தேர்தல் ஆணையம் 50000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்ல கூடாது என்கிறது. இது திருமண நகை எடுப்போருக்கும் பெரும் சிக்கல். ஏனென்றால் வீட்டில் சேமித்து வைத்த பணத்தை கொண்டு செல்பவர்கள் அதற்கு என்ன ஆவணத்தை காண்பிக்க முடியும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
தங்கம், வெள்ளி கட்டுப்பாடு என்ன: அதுமட்டுமில்லாமல் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும்போது அதை வாங்கியதற்கான ரசீதுனை கையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் திருமணத்திற்கு தங்கம் மற்றும் சீர்வரிசைக்காக வெள்ளிப் பொருட்களை வாங்கும் போது அதை வாங்கியதற்கான ரசீதை கையில் வைத்திருங்கள். ஒருவேளை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது சிக்கினால் அந்த ரசீதை காண்பித்தால் விடுவித்து விடுவார்கள்.
தேர்தல் காலத்தில் தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பதற்கு முடிந்தவரை ஆன்லைன் வங்கி பரிமாற்றங்களை பின்பற்றுவது நல்லது. மேலும் பணம் எடுத்து செல்பவர்கள் நம்பகத்தன்மை உறுதிப்படுத்த ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்கலாம். மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்கிறீர்கள் எனும் போது மருத்துவமனை சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
சொத்து, வீடு வாங்க அட்வான்ஸ் கொடுக்க சென்றால் அது தொடர்பான ஒப்பந்த பத்திரங்களை சமர்ப்பிக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் ஆவணத்தில் உள்ள விவரங்களும் உங்களிடம் உள்ள பணத்தின் அளவும் சரியாக ஒத்துப் போக வேண்டும். ஆவணங்கள் திருப்திகரமாக இல்லை என்றால் அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்து விடுவார்கள். தேர்தல் முறைகேடுகளுக்கானது அல்ல உங்கள் பணம் என்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் மட்டுமே பணம் கிடைக்கும்.தேர்தல் ஆணையம் மாவட்ட அளவில் முறையீட்டு குழுக்களையும் அமைத்துள்ளது. பொதுமக்கள் இங்கே ஆவணங்களை சமர்ப்பித்து தங்களுடைய பணத்தை திரும்ப பெறலாம்.


Click it and Unblock the Notifications