சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் இந்தியா மின்னணு பொருட்கள் விநியோக சங்கிலி 2025 (Source India Electronics Supply Chain 2025) என்ற தலைப்பில் 14 ஆவது மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சுமார் 150 நிறுவனங்கள் தங்களுடைய மின்னணு சாதனங்களை பார்வைக்காக வைத்துள்ளன. அதேபோல மின்னணு துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் முகவர்களும் என மொத்தம் 4000 பேர் இந்த கண்காட்சி மற்றும் இந்த மாநாட்டிற்கு வருகை தந்தனர். இந்திய மின்னணு தொழிற்சாலைகளின் கூட்டமைப்பான Electronics Industries Association of India (ELCINA) சார்பாக சென்னை வர்த்தக மையத்தில் 14வது ஆண்டாக இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது மற்றும் அவற்றின் மதிப்பை உயர்த்துவது ஆகும். இந்த நிகழ்வில் தைவான் ,சிங்கப்பூர் ,ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த மின்னணு சாதன நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாடு மின்னணு சாதன உற்பத்தியில் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறினார். ஒரு பில்லியனுக்கு பூஜ்ஜிய பாகங்கள் குறைபாடு என்ற நிலையை தமிழ்நாடு எட்டி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பில்லியன் சாதனங்களில் ஒரு சாதனம் கூட குறைபாடு கொண்டது கிடையாது என்ற நிலையை எட்டி இருப்பதாக கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் மின்னணு சாதன உற்பத்தியில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், சில மின்னணு சாதன உற்பத்தி ஆலைகளில் 70 லிருந்து 80 சதவீதம் பெண் ஊழியர்கள் தான் பணியாற்றுகின்றனர் என்றார். தற்போது தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி மதிப்பு 12 பில்லியன் டாலர்களாக இருக்கிறது, இதனை 100 மில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்கு என தெரிவித்தார்.
இந்தியாவின் மின்னணு உற்பத்தி சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என குறிப்பிட்ட அவர், 2015 -16ஆம் ஆண்டு இந்தியாவில் 37 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மின்னணு சாதனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன அது 2023-24 ஆம் ஆண்டில் 115 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது என குறிப்பிட்டார்.
அதேபோல ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் மதிப்பு 29 மில்லியன் டாலர்களாகவும் இதன் மூலம் 2 மில்லியன் வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன என்பதையும் சுட்டிக் காட்டினார். அண்மையில் கூட ஐபோன்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது என ஒரு தரவு வெளியானது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications