சென்னை: இந்தியாவில் உற்பத்தி, தொழில், சேவை என பல துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக ஐபோன், லேப்டாப் என மின்னணு சாதன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் திறன்மிகு ஊழியர்கள் கிடைப்பதும் ஏற்றுமதி இறக்குமதிக்கு ஏற்ப துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலை இணைப்புகள் என அனைத்து வசதிகளும் இருப்பதே இதற்கு முக்கியம் . ஏற்கனவே தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மின்னணு உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மூன்றாவதாக மின்னணு உற்பத்தி மையம் அமைக்கப்பட இருக்கிறது.

மத்திய அரசு இதற்கான அனுமதியை தந்திருக்கிறது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா மற்றும் டெபோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தமிழ் செயற்கை நுண்ணறிவு திட்டம் என்ற பெயரில் தமிழ் ஏஐ திட்டத்தை தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழ் ஏஐ எனப்படும் இந்த புதிய திட்டமானது தமிழ் மொழியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும், இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார். இந்திய மொழிகள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தோடு இணைக்கப்படுவதற்கான தொடக்கமாகவே இது இருக்கிறது என கூறியுள்ளார்.
இது தவிர தமிழ்நாடு மின்னணு உற்பத்தி மையமாக செயல்படுகிறது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவிலேயே செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்றும் தமிழ்நாட்டில் மூன்றாவது மின்னணு சாதன உற்பத்தி மையம் அமைப்பதற்கு அண்மையில் தான் மத்திய அரசு ஒப்புதல் தந்தது என்றும் கூறியிருக்கிறார். விரைவில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் இது தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் தான் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மின்னணு சாதன உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு 1112 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்தது என தெரிவித்திருக்கும் அவர் இந்த உற்பத்தி மையங்களில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தேவையான மின்னணு சாதனங்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வகையில் உற்பத்தி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications