சென்னை: இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது. இந்தியா இத்தகைய உயரத்தை எட்டுவதற்கு சில மாநிலங்களின் பங்களிப்பு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. 2030- 31ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஜிடிபி இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எஸ்&பி குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் அதே ஆண்டில் இந்தியா அப்பர் மிடில் இன்கம் நாடு என்ற அந்தஸ்தையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.2% உயர்ந்து 47.24 லட்சம் கோடி ரூபாய் என அதிகரித்தது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் மாநிலங்களை பார்க்கலாம்.

Gross State Domestic Product எனப்படும் ஜிஎஸ்டிபி அடிப்படையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். தேசிய ஜிடிபியில் 13.30 சதவீத பங்களிப்பை தருகிறது. இதன் ஜிஎஸ்டிபி 42.67 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மேலும் ஜிடிபி பர் கேப்பிடா எனப்படும் தனிநபர் வருமானம் 2. 89 லட்சம் ரூபாயாக இருக்கிறது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. தேசிய ஜிடிபிக்கு 8.90 சதவீத பங்களிப்பை தருகிறது. இங்கே ஜிஎஸ்டிபி 31.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி தனிநபர் வருமானம் 3.5 லட்சங்களாக இருக்கிறது.
அடுத்ததாக கர்நாடக மாநிலம் 8.20 சதவீத ஜிடிபி பங்களிப்புடன் இருக்கிறது. இந்த மாநிலத்தின் ஜிஎஸ்டிபி என்பது 28.09 லட்சம் கோடிகள் ஆகும். கர்நாடகாவில் தனிநபர் வருமானம் 3.31 லட்சம் ரூபாயாக இருக்கிறது . அடுத்ததாக இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் குஜராத் 8 .10 சதவீத ஜிடிபி பங்களிப்பை வழங்குகிறது. இதன் மாநில ஜிஎஸ்டிபி 27.9 லட்சம் கோடி ரூபாயாகவும் தனிநபர் வருமானம் 3.13 லட்சம் ரூபாயாகவும் இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் 8.40 சதவீத ஜிடிபி பங்களிப்பை தருகிறது. இந்த மாநிலத்தின் ஜிஎஸ்டிபி 24.9 லட்சம் கோடியாக இருக்கிறது. இங்கே தனிநபர் வருமானம் 0.96 லட்சம் ரூபாய் ஆகும். ஜிஎஸ்டிபி அடிப்படையில் மேற்குவங்கம் ஆறாவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் 8ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தின் ஜிஎஸ்டிபி 16.5 லட்சம் கோடி, இங்கே தனிநபர் வருமானம் 3.83 லட்சம் ரூபாயாக இருக்கிறது. நாட்டிலேயே இங்குதான் தனிநபர் வருமானம் என்பது அதிகமாக காணப்படுகிறது. இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ஆந்திர பிரதேசமும், பத்தாவது இடத்தில் மத்திய பிரதேசமும் இருக்கிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications