தமிழரின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், பொங்கலுக்கான பரிசுதொகுப்புகள் வழங்க தமிழக அரசு தயாராகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் வேட்டி சேலை குறித்த அறிவிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால், பொதுமக்கள் எதிர்பார்த்த பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 இடம் பெறவில்லை. இந்த நிலையில், இந்த பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படவுள்ளது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு பெறும் நபர்கள் பொருளை பெற செல்ல வேண்டிய நேரம், நாள் குறிப்பிடப்பட்டிருக்கும், இந்த டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications