தமிழ்நாடு அரசு மாநிலத்தில் இந்திக்கு தடை விதிக்கக் கூடிய வகையிலான ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அரசு அதில் உண்மை இல்லை என கூறியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில் மாநிலத்தில் இந்தி மொழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கக்கூடிய மசோதாவை கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகின.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தி திணிப்பு செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குற்றம்சாட்டிய வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தான் அரசு இந்தி மொழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையிலான மசோதாவை கொண்டு வர இருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இந்த சூழலில் அரசு அதனை மறுத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி என கூறி அரசின் தகவல் சரிபார்ப்பகம் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே , அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் எனவே வதந்தியைப் பரப்பாதீர் என அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அந்த சமயத்தில் மாநில பட்ஜெட் சின்னத்தில் தேசிய ரூபாய் சின்னத்துக்கு பதிலாக ரூ என்ற தமிழ் எழுத்தை அரசு பயன்படுத்தியது. அப்போது பாஜக தலைவர்கள் மத்தியில் இதற்கு கடும் விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும் அரசு தமிழ் மொழியை பயன்படுத்தும் ஒரு முயற்சி தான் இது என அப்போது தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு இந்து திணிப்பை ஏற்க மாட்டோம், மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தொடர்ச்சியாக கூறிவரக்கூடிய சூழலில் தான் இந்தி திணிப்பை தடுக்கக்கூடிய நோக்கில் ஒரு புதிய மசோதாவை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அரசு அது வதந்தி என கூறியுள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியை திணிக்காத வரை நாங்கள் அந்த மொழியை எதிர்க்க போவதில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை கூறியிருக்கிறார் .
பாஜக அரசு முன்மொழிக் கொள்கை என்ற பெயரில் முதலில் இந்தியையும் அதன் அடுத்த கட்டமாக சமஸ்கிருத மொழியையும் தமிழ்நாட்டின் மீது திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசு தொடர்ந்து கூறி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலத்தின் இரு மொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என்றும் இந்த இரு மொழி கொள்கைதான் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை , உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு , வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணமாக இருக்கிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.


Click it and Unblock the Notifications