தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அங்குள்ள கூட்ட நெரிசல் தான். சென்னை டிராபிக் சிக்னல்களில் சிக்கி சிரமப்படுவோர்கள் ஏராளம். நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் மக்கள் மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில்கள், எம்டிசி பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை (என்சிஎம்சி) ஏற்கும் பிற பிளாட்பார்ம்களில் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளைப் பெறுவதற்கு ஏதுவான 'சிங்கார சென்னை' ஸ்மார்ட் கார்டை, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகப்படுத்தினார்.

இனி பொதுமக்கள் சென்னையில் சிரமமின்றி மின்சார ரயில், மெட்ரோ மற்றும் பேருந்து போக்குவரத்து ஆகியவற்றில் எளிதாக பயணம் செய்யலாம். இதற்காக, சிங்கார சென்னை பயண அட்டை என்ற ஒரே ஒரு நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு இருந்தால் போதும். இதன் மூலம் பொதுமக்கள் இந்த சேவைகள் அனைத்தையும் பயன்படுத்தலாம். இது இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முன்னதாக, இந்த சிங்கார சென்னை பயண அட்டை முதற்கட்டமாக சென்னை மெட்ரோ ரயில்களில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இனி இதை வைத்து அரசு பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்கலாம். இது மேலும், விரைவு ரயில் உள்ளிட்ட மற்ற போக்குவரத்து துறைகளிலும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இனி பொதுமக்கள் டிக்கெட் எடுக்க கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதில் யாருக்கெல்லாம் நன்மை: இந்த சிங்கார சென்னை பயண அட்டை மூலம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர், அவசர அவசரமாக ஆபிஸ் செல்வோர் என அனைவருக்கும் நன்மை ஏற்பட உள்ளது. எனவே ஒரே ஒரு ஸ்மார்ட் கார்டை எடுத்து வைத்தால் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளை தாண்டி எளிதில் பயணிக்கலாம்.
முன்னதாக, மூன்று வகையான பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க வெவ்வேறு பயண அட்டைகளை பெற்று பயணித்து வந்தனர். ஆனால் இனி அந்த கவலை இல்லை. மெட்ரோ ரயில் சேவைகளுக்கு, கார்டை பெற்று அதை குறிப்பிட்ட ரீசார்ஜ் செய்து ஸ்கேன் செய்து பயன்படுத்தி வந்தனர். அதேபோல், மின்சார ரயில் மற்றும் மாநகர பேருந்து போக்குவரத்து ஆகியவற்றிற்கு மாதாந்திர பாஸ் அல்லது தினசரி டிக்கெட்டுகளை பெற்று பயணம் செய்து வந்தனர். எனவேதான் தமிழக அரசு பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்த அனுமதித்துள்ளது.
சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு: சிங்கார சென்னை காமன் மொபிலிட்டி கார்டை வாங்கி பொதுமக்கள் மெட்ரோ மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து பயணிப்பது இனி எளிது. அதேபோல அரசு பேருந்துகளில் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். இதன் மூலம் மூன்று போக்குவரத்துகளில் மக்கள் ஒரே கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம். குறிப்பிட்ட தொகையைக் கொண்டு கார்டை ரீசார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று போக்குவரத்து சேவைகளையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் இந்த கார்டு கிடைக்கும்: முதல் கட்டமாக எஸ்பிஐ வங்கி மூலம் 50,000 ஸ்மார்ட் கார்டுகள் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. MTC நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறுகையில், MTC இல் தற்போது மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் மூலம் 98.5% டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும், சிங்கார சென்னை கார்டு மூலம் எம்டிசி பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ பார்க்கிங் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் செலுத்தலாம். கூடுதலாக, இது NCMC ஐ ஆதரிக்கும் எந்த தளத்திலும் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
எப்படி ரீசார்ஜ் செய்வது: பொதுமக்கள் ப்ரீபெய்ட் கார்டை நகரம் முழுவதும் உள்ள MTC கவுன்டர்களில் அல்லது ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். இந்த முயற்சிக்காக நாங்கள் ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும், இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கான சிறப்பு பயிற்சியும் நடத்த உள்ளதாகவும், கூடுதலாக, MTC கண்டக்டர்கள் மூலம் நேரடியாக கார்டுக்கு ரீசார்ஜ் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வர்கீஸ் தெரிவித்துளார்.


Click it and Unblock the Notifications