சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் திடீர் மரணங்களும் இளம் வயதினரே கூட மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதையும் நாம் காண முடிகிறது. இந்நிலையில் மக்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என மருத்துவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.
முழு உடல் பரிசோதனை: மக்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் நிச்சயம் 15,000 ரூபாய் வரை தேவைப்படும். அரசே கூட சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்துகிறது. ஆனால் இதற்கும் 1000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

நலம் காக்கும் ஸ்டாலின்: சாமானிய மக்களை பொறுத்தவரை மருத்துவ பரிசோதனைக்காக இத்தனை ஆயிரங்களை செலவு செய்யும் நிலையில் இல்லை. எனவே தான் தமிழ்நாடு அரசு நலம் காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய முழு உடல் பரிசோதனை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் இந்த இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
இலவச முழு உடல் பரிசோதனை: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக 38 மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். இனி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என அப்போது அவர் அறிவித்தார்.
என்னென்ன சிகிச்சை: இந்த மருத்துவ முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை ,எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ,மகப்பேறு மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இருதயம், நரம்பு ,தோல் ,கண் மருத்துவம் மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவம் ,மனநல மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் அது சார்ந்த சிகிச்சைகளும் ஆலோசனைகளும் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.
புற்றுநோய் சோதனை: இந்த முகாமில் புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் வகையிலான மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில் அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 என்கிற வகையில் 1364 முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. சென்னையில் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
இலவச முகாம்: அடுத்த ஓராண்டு காலத்திற்கு இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முகாம் தொடர்பான விவரங்கள் அந்தந்த பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்: இந்த மருத்துவ முகாம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் முகாமிற்கு வருவோரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு வலியுறுத்தினார். மேலும் இவர்கள் நோயாளிகள் அல்ல மருத்துவ பயனாளிகள் என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.
வாட்ஸ் அப்பில் கோப்புகள்: பொதுமக்களின் ரத்த மாதிரிகள் அனைத்தும் பார் கோடு முறையில் சேகரிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் கோப்புகளாகவும் வாட்ஸ் அப் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படும் இதனை எந்த மருத்துவமனைக்கும் கொண்டு சென்று சிகிச்சை பெறலாம் என முதலமைச்சர் அப்போது உறுதி அளித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம்: இந்த முகாமில் மருத்துவ சோதனைகள் மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது, முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கான அட்டையை வழங்குவது , அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமிற்கு சென்றால் அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள் அட்டை கிடைத்துவிடும் இதனை வைத்து பல அரசின் நல திட்டங்களை பெறலாம்.
மருத்துவ காப்பீடு: தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடை வழங்குகிறது இதுவரை இதனை பெறாதவர்கள் இந்த முகாமிற்கு சென்றால் அன்றைய தினமே மருத்துவ காப்பீடு அட்டையும் கிடைத்துவிடும். ஒவ்வொரு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அந்த மாவட்டத்தில் எந்த தேதியில் எங்கெல்லாம் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது என்ற விவரம் வெளியிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications