ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமான சேவையை கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மாவட்டமாகவும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வருகை தரக்கூடிய ஒரு மாவட்டமாகவும் ராமநாதபுரம் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகியவற்றுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் ஐந்து இடங்களை இதற்காக தேர்வு செய்திருப்பதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்து இருக்கக்கூடிய இந்த ஐந்து இடங்களிலும் இந்திய விமான நிலைய ஆணையம் விரைவில் ஆய்வு செய்யும் என்றும் அதன்பிறகு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ராமேஸ்வரத்தில் விமான நிலையம் கட்டப்பட்டால் அங்கே பல்வேறு உள்கட்டமைப்புகள் மேம்படும் அது தவிர சுற்றுலாத்துறை இன்னும் மேம்பட்டு பொருளாதார ரீதியாக அந்த மாவட்டமே பலன்பெறும் என தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. தற்போதைக்கு இந்த ஐந்து இடங்களிலும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் அதன் பின்னர் முதல் கட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படும் . இந்த ஐந்து இடங்களிலும் விமான நிலையம் அமைப்பதன் சாதக பாதகங்கள் என்ன என்பது அந்த ஆய்வறிக்கையில் இடம்பெறும்.
இதனை அடுத்து இந்த ஐந்து இடங்கள் மூன்று இடங்களாக குறைக்கப்படும் பின்னர் இந்த மூன்று இடத்தில் இருந்து ஒரு இடம் தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு கிட்டத்தட்ட 700 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஓடுபாதையுடன் கோடு சி பிரிவிலான விமானங்களை இயக்கும் வகையில் இது இருக்கும். கோடு சி பிரிவு விமானங்கள் என்றால் மொத்தமான இறக்கைகளையும் சேர்த்து 24 இல் இருந்து 36 மீட்டர் அகலம் கொண்ட விமானங்கள் ஆகும்.
தற்போது ராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய வெளிநாட்டவர்களும் வெளிமாநிலத்தவர்களும் மதுரை வரை விமானத்தில் வந்துவிட்டு பின்னர் மதுரையிலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து ராமேஸ்வரம் வர வேண்டி இருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியை பார்வையிடுவதற்காக வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வாரணாசிக்கு சென்று தங்களுடைய பக்தி பயணத்தை நிறைவு செய்கின்றனர். அவர்களுக்கு இந்த விமான நிலையம் வந்தால் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விமான நிலையம் வரும்போது இந்த பகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருக்கிறது.


Click it and Unblock the Notifications