திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தொழில்துறை சார்ந்த வளர்ச்சிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளாதார மேம்பாடு ஆகியவை தலைநகர் சென்னையுடன் நின்றுவிட கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், குறிப்பிட்ட பகுதியோடு நின்று விட கூடாது, மாநிலம் முழுவதும் இது பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டங்களிலும் சிப்காட் போன்ற தொழில் பூங்காக்கள் நிறுவப்படுவதையும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் அரசு நோக்கமாக கொண்டிருக்கிறது.

இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே கங்கை கொண்டான் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பு சந்தைக்குள் நுழைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது உள்ளிட்டவை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 4 சிப்காட்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
கங்கைகொண்டான் பகுதியில் ஏற்கனவே சிப்காட் செயல்பட்டு வந்தாலும் புதிய நிறுவனங்களுக்கு அங்கே இடம் இல்லை. எனவே கங்கைகொண்டான் சிப்காட்டினை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதே பகுதியில் இரண்டாம் கட்ட சிப்காட் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த பகுதியிலேயே இரண்டு சிப்காட்கள் அமைய உள்ளன.
இதுதவிர நாங்குநேரியில் இரண்டு சிப்காட்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிப்காட் தொழில் பூங்காக்களுக்கும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை அப்டேட்ஸ் என்ற எக்ஸ் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாங்குநேரியில் இரண்டு பகுதிகளில் இந்த சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கின்றன. 2260 ஏக்கர் பரப்பளவி தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது . இதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

நாங்குநேரி பகுதியில் மறுகால் குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் ஆகிய இரண்டு இடங்களிலும் 2260 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட உடன் கட்டுமான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மூலக்கரைப்பட்டி பகுதியிலும் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழில்பூங்காவை அமைக்க இருக்கிறது.
இதன் மூலம் திருநெல்வேலியில் சிப்காட் தொழில்பூங்காக்களின் எண்ணிக்கை 5ஆக உயர இருக்கிறது.
சிப்காட்டுகள் அமைக்கப்படுவதன் மூலம் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு முன் வரும். இது நெல்லை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் . நெல்லையில் அமையக் இருக்கும் சிப்காட்களை பொறுத்தவரை அருகிலேயே இரண்டு துறைமுகங்களை கொண்டுள்ளது.
தூத்துக்குடி மற்றும் விளிஞ்சம் துறைமுகங்களுக்கு அருகிலேயே இவை அமைகின்றன என்பதால் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் இங்கே ஆலைகளை நிறுவ முன்வரும். தமிழ்நாட்டில் தற்போது 40 தொழில் பூங்காக்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன .இது தவிர அரசு கூடுதலாக 21 இடங்களில் சிப்காட்டுகளை அமைப்பதற்கு திட்டமிட்டு இருக்கின்றது. மொத்தமாக 21,404 ஏக்கர் பரப்பளவில் இவை அமைய இருக்கின்றன. தர்மபுரி, கன்னியாகுமரி ,ஈரோடு ராமநாதபுரம் கிருஷ்ணகிரி சேலம் மதுரை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications