செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை எவ்வளவு பெரிய முதலீட்டில் துவங்கினாலும், உலகின் முன்னணி நான்கு நிறுவனங்களான Applied Materials, ASML, KLA மற்றும் Tokyo Electron ஆகியவற்றின் உபகரணங்கள் இல்லாமல் இந்த தொழிற்சாலை இயங்க முடியாது. இந்தியாவில் மத்திய மாநில அரசின் முயற்சியில் பல செமிகண்டக்டர் நிறுவனங்கள் வரும் வேளையில், தற்போது உலகின் முன்னணி செமிகண்டக்டர் உபகரண தயாரிப்பு நிறுவனங்களை ஈர்க்க துவங்கும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் சிக்சரை தமிழ்நாடு அடித்துள்ளது என்றால் மிகையில்லை.
வருடம் 26.52 பில்லியன் டாலர் வருவாய் உடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் துறையின் உபகரண தயாரிப்பாளரான அப்லைய்டு மெட்டிரீயல் (Applied Materials), முதல் முறையாக இந்தியாவில் ஒரு உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.

கடந்த வாரம் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் 3 செமிகண்டக்டர் நிறுவனத்தை அள்ளிட்டு வந்தது நினைவிருக்கும். இதில் ஒரு நிறுவனம் தான் அப்லைய்டு மெட்டிரீயல் (Applied Materials).
இந்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, சென்னையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் அட்வான்ஸ் டெக்னாலஜி டெவலப்மென்ட் சென்டரை (CoE) அமைக்க உள்ளது. இந்த திட்டம் 500க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இந்தியாவில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட 5 செமிகண்டக்டர் திட்டத்தில் 4 திட்டங்கள் குஜராத்தில் அமைக்கப்பட உள்ளது, சமீபத்தில் மாநில அரசு அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அதானி - இஸ்ரேல் டவர் செமிகண்டக்டர் கூட்டணியின் 10 பில்லியன் டாலர் திட்டமும் பிஜேபி ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட உள்ளது. இம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் பிற மாநிலங்கள் செமிகண்டக்டர் துறையில் நிறுவனங்களை ஈர்ப்பது என்பது முடியாமல் போகலாம், காரணம் மத்திய அரசின் ஆதிக்கம். இப்படியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு மாற்று யோசனை உடன் நேரடியாக செமிகண்டக்டர் துறையில் OSAT, ஃபேப்ரிகேஷன் துறையில் நிறுவனங்களை ஈர்க்காமல் இத்துறையைச் சார்ந்த பிற நிறுவனங்களை ஈர்க்க துவங்கியது.
இதன் விளைவாகவே முதல்வர் முக ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் Yield Engineering Systems நிறுவனம், Microchip நிறுவனம், Applied Materials நிறுவனம் ஆகியவற்றை ஈர்த்துள்ளது. இந்த நிறுவனங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டின் செமிகண்டக்டர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக அமையும்.
இதேவேளையில் அமெரிக்கா, தைவான், கொரிய செமிகண்டக்டர் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர முக்கியமான காரணம் உலகளவில் பரவியிருக்கும் சீனா + 1 கொள்கை தான்.
Applied Materials நிறுவனம் சமீபத்தில் தனது முதல் இடத்தை ASML நிறுவனத்திடம் இழந்தது. அமெரிக்க அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் மத்தியிலும் இந்நிறுவனம் சுமார் 43 சதவீத விற்பனையைச் சீனாவைச் சார்ந்து இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அரசின் லேட்டஸ்ட் கட்டுப்பாடு இதை 2வது இடத்திற்குத் தள்ளியது.
முதல் இடத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் உபகரண உற்பத்திக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மையத்தை சென்னையின் தரமணியில் அமைக்க Applied Materials திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications