சென்னை: மாணவ, மாணவிகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. குறிப்பாக பள்ளிப்படிப்புடன் நின்றுவிடாமல் உயர்கல்விக்கும் சென்று மாணவ, மாணவிகள் சாதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிராமப்புறங்களில் வசிக்கும் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்பதற்காகவே புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் நல்ல பலனை தருவது புள்ளி விவரங்கள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான புள்ளிவிவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி , 2023-24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் குறைந்தது 74 சதவிகிதம் பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதாவது 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 3,34,723 பேரில் 2,47,744 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். இதில் ஐடிஐக்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். 2021-22ஆம் கல்வியாண்டில், இந்த எண்ணிக்கை 45 சதவிகிதமாகவும், 2022-23ஆம் கல்வியாண்டில் 69 சதவிகிதமாகவும் இருந்தது.
தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு அதாவது 2022-23ம் ஆண்டில் இருந்து இந்த விகிதம் உயர தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் படித்து விட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்த சலுகை அளிக்கப்படும் என அரசு உறுதி அளித்தது.
புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்து பல்வேறு அரசு பள்ளி மாணவிகளும் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இந்த திட்டம் கிராமப் பகுதிகளை சேர்ந்த மாணவிகளுக்கு ஊக்கமளிப்பதால் பெற்றோர் உயர்கல்வி பயில அனுப்பி வைக்கின்றனர்.
மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம் எப்படி செயல்படுகிறதோ அதே போல மாணவர்களுக்காக அரசு கொண்டு வந்த திட்டம் தமிழ் புதல்வன் திட்டம். இந்த திட்டத்திலும், அரசு பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அடுத்ததாக அரசு நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துகிறது. 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்வது, போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பல்துறை திறன் பயிற்சி பெறுவது, தொழில்முனைவோராக மாற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு எந்த பிரிவில் உயர்கல்வி சேர வேண்டும், எதில் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது என அறியாமல் தவித்திருந்த அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த திட்டங்கள் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications