சென்னை: தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஆறு சேட்டிலைட் நகரங்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு நில கையகப்படுத்துதலுக்கு என ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சென்னைக்கு அருகே இருக்கக்கூடிய திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய ஆறு நகரங்களும் சேட்டிலைட் நகரங்களாக மேம்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

சேட்டிலைட் நகரங்கள் என்பது நவீன வசதிகள் அனைத்தும் நிறைந்த நகரங்களாக இருக்கும். மெட்ரோ ரயில் இணைப்பு, சாலை கட்டமைப்புகள், தொழில் மையங்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டவையாக இருக்கும்.
இந்த நகரங்களை மேம்படுத்தும் பணிக்காக நிலம் சேகரிப்பு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சிஎம்டிஏ வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆறு சேட்டிலைட் நகரங்களிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பல்வேறு நவீன மையங்களை அமைப்பது, மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை அமைப்பது மற்றும் அவுட்டர் ரிங் சாலைகள் மற்றும் பிற வசதிகளை நிறுவுவதற்காக நிலம் சேகரிப்பு திட்டமானது பயன்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி சிஎம்டிஏ ஆனது 600 ஏக்கர் பரப்பளவிற்கு நிலத்தை சேகரிப்பதற்கான முன்மொழிவை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக மாடம்பாக்கம், அகரம்தென், கோவிலஞ்சேரி கிராமம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகளானது தொடங்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலம் சேகரிப்பு திட்டம் மூலம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பொது உள்கட்டமைப்பு, சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கீடு செய்த பிறகு மீதமுள்ள இடங்கள் ஒரே வடிவிலான பிளாட்களாக மேம்படுத்தப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு மேம்படுத்தப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு தற்போது இருப்பதைவிட பல மடங்கு உயர்ந்திருக்கும் என்றும் தெரிகிறது. சென்னை மட்டுமின்றி இந்த நிலம் சேகரிப்பு திட்டமானது மாநிலத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் டவுன்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
பொதுவாக தமிழ்நாட்டில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் என்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு திட்ட பணிகள் தொடங்காமல் தாமதமாகின்றன.
எனவே புதிய நிலம் சேகரிப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கக்கூடிய ஐம்பது சதவிகித உரிமையாளர் ஒப்புதல் அளித்தால் போதும் அரசு அவற்றை கைப்பற்றி மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications