மதுரை: தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை காணும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில்துறை அமைப்பு (CII) சார்பில் மதுரையில் "கனெக்ட் மதுரை 2024” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படுவதாக தெரிவித்தார். சீனாவுக்கு மாற்றாக உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிசைனிங் ஆகியவற்றில் கூடுதல் வசதிகளுக்கான பெரும் தேவை சர்வதேச அளவில் உருவாகி இருக்கிறது என தெரிவித்தார்.

சீனா பிளஸ் ஓன் கொள்கையில் இந்தியாவின் மீது தான் அனைவரின் கவனமும் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன எனக் கூறினார். இந்த மாற்றம் ஒரு ஆரம்பம் மட்டுமே இன்னும் நிறைய விஷயங்கள் காத்திருக்கின்றன என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரையை தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார். இதற்காக சில முக்கியமான துறைகளை தேர்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் அடுத்தடுத்து மதுரையில் முதலீடுகள் குவியும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.
நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற திட்டங்களை பயன்படுத்தி தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட படிப்புகளை நமது கல்லூரிகளில் கொண்டு வர வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், இதனை வடிவமைக்க உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒத்துழைத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் திறமையான பணியாளர்கள் அதிகம் இருக்கின்றனர் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.
அதிவேக பிராட்பேண்ட் மற்றும் பைபர் இணைப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும் என அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்தார். ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து குவாண்டம் கம்ப்யூட்டிங் வசதிகளை ஏற்படுத்தி அதிநவீன தொழில்நுட்பத்தில் மதுரையை முன்னணியில் வைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
இந்த வளர்ச்சிகளுக்கு தேவையான தொழில்நுட்ப பூங்காக்களை மதுரையில் நிறுவி தொழில் தொடங்குவதற்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications