தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக பயிர் கடன், நகை கடன், வணிக கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் என பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. வழக்கமாக தேர்தல் காலம் என்றாலே பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் போட்டி போட்டுக் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும்.
தமிழ்நாட்டில் 22,500 க்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் ,நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் அண்மை காலமாக அதிகமான எண்ணிக்கையில் வந்து மக்கள் கடன் வாங்குகிறார்களாம்.

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வழக்கமாகவே தேர்தல் நேரம் என்றாலே ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் தேர்தல் வாக்குறுதி வழங்குவார்கள். மக்களின் வாக்குகளை கவர அண்மை காலமாக கடன் தள்ளுபடி என்ற அறிவிப்புகள் முக்கிய இடம் இடம்பிடிக்கின்றன.
அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்வோம் என்ற அறிவிப்பு அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம் பெறும். அந்த வகையில் எதிர்க்கட்சியை தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட மாற்றுத்திறனாளி கடன் மற்றும் சிறுபான்மையினர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறார்.
திமுகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இப்படி ஒரு அறிவிப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தற்போது அதிக அளவில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். கடந்து 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 72,000 கோடியாக இருந்த கூட்டுறவு வங்கி கடன், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாத காலகட்டத்தில் 83,000 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தேர்தல் நேரத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இவ்வாறு கடன் வாங்குவது தெரிய வந்திருக்கிறது. எனவே இப்போது கடன் வாங்கினாலும் இன்னும் சில மாதங்களில் அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என மக்களிடையே ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி அறிவிப்பை திமுக வெளியிட்டது, பின்னர் ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றியது.


Click it and Unblock the Notifications