சென்னை: பொதுவாக ஒரு சொத்தினை விற்பனை செய்யும் போதோ அல்லது அதனை மற்றவர்கள் பெயருக்கு மாற்றும்போதோ அரசிடம் அதனை முறையாக பதிவு செய்ய வேண்டும். இது சட்ட ரீதியாக அந்த சொத்து யாரிடம் உள்ளது என்பதை பதிவு செய்யும் ஆவணம் ஆகும்.
இவ்வாறு பதிவு செய்யும்போது அரசு சார்பாக ஸ்டாம்ப் டியூட்டி எனப்படும் முத்திரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்டாம்ப் டியூட்டி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். இவ்வாறு பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னரே அரசுக்கான ஸ்டாம்ப் டியூட்டியை நாம் செலுத்தி விட வேண்டும்.

இவ்வாறு நாம் செலுத்தும் ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பத்திர பதிவு கட்டணங்கள் தான் மாநில அரசுக்கான முக்கிய வருவாய் ஆதாரமாகவும் இருக்கிறது. சில மாநிலங்களில் பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் பத்திரவு பதிவு கட்டணங்களில் சலுகை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் ஒரு சொத்தினை வாங்கும் போது அது வீடாக இருக்கட்டும் அல்லது நிலமாக இருக்கட்டும் அந்த சொத்தின் மதிப்பில் 7 சதவீத தொகையை ஸ்டாம்ப் டியூட்டியாகவும் , சொத்தின் மதிப்பில் 4 சதவீத தொகையை பத்திரப்பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டியிருக்கும்.
அதாவது ஒரு சொத்தினை வாங்கும் போது அதன் மதிப்பில் 11 சதவீதம் தொகையை இதற்காகவே ஒதுக்கீடு செய்து விட வேண்டும். இந்த கட்டணங்கள் சொத்து மீதான அரசின் கைடுலைன் வேல்யூவை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்யப்படுகிறது.
உதாரணமாக அரசு நிர்ணயம் செய்துள்ள ஸ்டாம்ப் டியூட்டி தொகையை ஒரு சொத்தை வாங்குபவர் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். இந்த முத்திரை தீர்வு தொகை என்பது இரண்டு விதங்களில் கணக்கிடப்படுகிறது. ஒன்று குறிப்பிட்ட அக்ரீமெண்ட் வேல்யூ அல்லது கைடு லைன் வேல்யூ. இந்த இரண்டில் எது அதிகமோ அதன் அடிப்படையில் தான் இந்த கட்டணமானது கணக்கீடு செய்யப்படுகிறது.
உதாரணமாக 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தினை வாங்குகிறோம் என்றால் அதில் 7 சதவீதம் தொகை அதாவது 2,80,000 ரூபாயை ஸ்டாம்ப் டியூட்டியாக செலுத்த வேண்டும், பத்திரப்பதிவு கட்டணமாக 4 சதவீதம் தொகை அதாவது 1,60,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதாவது 4.40 லட்சம் ரூபாயை தயாராக வைத்து கொண்டு தான் பதிவு செய்ய முடியும்.
இந்த முத்திரை தீர்வு என்பது சொத்தின் சந்தை மதிப்பு, அது எந்த வகையான சொத்து, வீடு, அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தால் எத்தனை அடுக்குகள், அந்த சொத்து அமைந்திருப்பது கிராமப்புறமா, நகர்ப்புறமா, அந்த சொத்து குடியிருப்பாக பயன்படுத்தப்படுகிறதா அல்லது வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறதா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இவை கணக்கீடு செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications