மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத உயர்வான அளவான 4.87 சதவீதத்தை விடவும் நவம்பர் மாதம் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது இந்திய ரிசர்வ் வங்கியின் 2-6 சதவீதம் என வரம்பிற்குள் இருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதம் தேசிய சராசரி பணவீக்க அளவீட்டை ஒப்பிடுகையில், ஒன்பது மாநிலங்கள் நாட்டின் சராசரி அளவை காட்டிலும் அதிகப் பணவீக்க அளவீட்டைக் கொண்டு உள்ளது, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமாகத் தமிழ்நாட்டின் பணவீக்கம் குறித்துத் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கியப் பதிவைச் செய்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவு அதாவது Cost of Living கணக்கிடும் பொருட்டு நுகர்வோர் பணவீக்க அளவீடுகள் கணக்கிடப்படுகிறது. இந்த வகையில் நவம்பர் மாதம் நாட்டின் நுகர்வோர் பணவீக்க அளவு 5.55 சதவீதமாக உள்ளது.
இதே நவம்பர் மாதம் ஒடிசாவில் 7.65 சதவீதமும், ராஜஸ்தானில் 6.99 சதவீதமும், ஹரியானாவில் 6.78 சதவீதமும் எனப் பீகார், கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற 9 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகப் பணவீக்க விகிதம் கொண்டு உள்ளது. இந்த 9 மாநிலங்களில் குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 5.56 சதவீதம், தேசிய சராசரி 5.55 சதவீதம்.
இதேபோல் குறைவான பணவீக்கம் கொண்டுள்ள மாநிலங்களில் டெல்லி முதல் இடத்தில் வெறும் 3.10 சதவீத அளவீட்டைக் கொண்டு உள்ளது. இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 6 இடங்களைப் பிடித்த நிலையில் தமிழ்நாடு 4.97 சதவீதத்துடன் 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பதிவில் இந்திய அளவில் பணவீக்கம் 5.55 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் தேசிய சராசரியை விடவும் குறைவாக 4.97 சதவீதமே இருப்பது குறிப்பிடத்தக்கது . இது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறப்பானதொரு இடத்தைப் பிடித்திருக்கின்றது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு எனத் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச நாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவின் நவம்பர் மாதத்தின் 5.55 சதவீத பணவீக்கத்தைப் பார்க்கும் போது, பிரிட்டன் (4.6%), ஜப்பான் (3.1%), அமெரிக்கா (3.3%), ஜெர்மனி (2.3%), பிரான்ஸ் (3.8%), பிரேசில் (4.8%), சீனா (-0.5%) ஆகிய நாடுகளில் குறைவாக உள்ளது. தென்கொரியா (5.9%), ரஷ்யா (7.5%) மட்டும் இந்திய அளவீட்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications