சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, கோடிங் உள்ளிட்டவற்றின் அடிப்படைகளை கற்றுத் தரும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சர்வதேச அளவில் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்கள் அதையும் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் இதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கிறது.
இதற்காக துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து தகவல்களை பெற்றிருப்பதாகவும் கூடிய விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தில் கோடிங், மெசின் லேர்னிங், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவை மட்டும் இல்லாமல் பல்வேறு ஆன்லைன் கற்றல் கருவிகளும் இணைக்கப்பட இருக்கின்றனவாம்.
GeoGebra மற்றும் PhET உள்ளிட்ட ஆன்லைன் கருவிகளையும் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு கணினி மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்கள் எடுக்கப்பட இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நவீன ஆய்வக வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்படும் என்றும் இதற்கு உரிய பயிற்சிகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர மாணவர்களுக்கு visual-based programming கருவிகளான Scratch மற்றும் Blockly போன்ற கருவிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அனிமேஷங்களை உருவாக்குவது வீடியோ கேம்களை உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை பயிற்சிகளும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு பைத்தான் மற்றும் பிற ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் கற்றுத் தரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இது தொடர்பாக இந்த துறை சார்ந்த நிபுணர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தான் இந்த பாடத்திட்டங்களை உருவாக்கி இருக்கின்றனர். 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் பிரிவை சேர்ந்த ஆசிரியர்களுக்கு இந்த புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி வழங்கப்படும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த பாட திட்டமானது மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து Technology Education and Learning Support என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அதன் மூலம் தமிழ்நாட்டின் 100 பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பை வரையிலான 38 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.


Click it and Unblock the Notifications