இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவு ஏற்பட்டு வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாகக் கொரோனா தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய அரசு லாக்டவுன் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதனால் நாட்டின் வர்த்தகச் சந்தை வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் நவம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 6.51 சதவீதமாக உள்ளது. லாக்டவுன் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 23.52 சதவீதமாக இருந்தது.
இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?
தமிழ்நாடு
CMIE அமைப்பின் தரவுகள் படி 2020 துவக்கத்தில் ஜனவரி மாதம் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை (Unemployment) விகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. இந்த அளவீடு கொரோனா தாக்கம் இந்தியாவில் துவங்கிய நிலையில் படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியாக 49.8 சதவீதம் என்ற மோசமான நிலையை அடைந்தது.
இதே ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.52 சதவீதமாக இருந்தது.
தொடர் உயர்வு
ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவீதம் என்ற மோசமான வேலைவாய்ப்பின்மை அளவீட்டில் இருந்து படிப்படியாக உயர்ந்த தமிழ்நாடு, நவம்பர் மாதத்தில் வெறும் 1.1 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன் இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது தமிழ்நாடு.
மேகாலையா
தமிழ்நாட்டைப் போல் மேகாலயாவும் 1.1 சதவீத வேலைவாய்ப்பின்மை அளவீடு உடன் உள்ளது.
இந்த லாக்டவுன் காலத்தில் சாமானிய மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமலும், வருமானம் இல்லாமலும் கொரோனா உடன் போராடி வந்த நிலையில் தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
தென் மாநிலங்கள்
வேலைவாய்ப்பின்மை (Unemployment) அளவீடு பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து தெலங்கானா 1.5 சதவீதமும், கர்நாடகா 1.9 சதவீதமும், புதுச்சேரி 2.2 சதவீதமும், கேரளா 5.8 சதவீதமும், ஆந்திரா 6 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
மோசமான நிலை
இந்தியாவிலேயே வேலைவாய்ப்பின்மையில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது ஹரியானா. ஹரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை 25.6 சதவீதமாக உள்ளது, இது தமிழ்நாட்டில் லாக்டவுன் விதிக்கப்பட்ட மாதத்தில் இருந்த அளவீடு.
ஹரியானாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் 18.6 சதவீதம், கோவா 15.9 சதவீதம், இமாச்சல் பிரதேஷ் 13.8 சதவீதம், திரிபுரா 13.1 சதவீதம், மேற்கு வங்காளம் 11.2 சதவீதம் என முதல் 7 இடங்களைப் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications