தமிழ்நாடு ஸ்டார்ட்அப் துறையின் முக்கிய புள்ளியாக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு தற்போது பல துறையில் இயங்கிவருவதோடு, பல துறையில் முதலீடும் செய்ய துவங்கியுள்ளார். இதில் முக்கியமாக ZOHO செமிகண்டக்டர் டிசைனிங் துறையில் இறங்குவது முதல் கருவி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பவர் டூல்ஸ் நிறுவனம் வரையில் பல முதலீடுகள் இதில் அடங்கும்.
இந்த நிலையில் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு யாளி என்னும் டிரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த வாரம் தான் சென்னையில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் -ன் டிரோன பிரிவான WING சென்னையில் டிரோன் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீதர் வேம்பு டிரோன் நிறுவனத்தில் தனது புதிய முதலீட்டை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள யாளி ஏரோஸ்பேஸ் (Yali Aerospace) என்ற ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எக்ஸ்-ல் பதிவிட்டு உள்ளார்.
இந்த நிறுவனத்தை தினேஷ் பாலுராஜ் மற்றும் அனுக்கிரஹா என்ற கணவன் - மனைவி ஜோடி இணைந்து நடத்தி வருகின்றனர். நெதர்லாந்தில் இருந்து தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூருக்குத் திரும்பி இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம், செங்குத்தாகக் கிளம்பி இறங்கக்கூடிய பிக்சட் இறக்கை கொண்ட ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த ட்ரோன் மூலம், 150 கி.மீட்டர் தூரம் வரை உள்ள மருத்துவமனைகளுக்கு 7 கிலோ கிராம் வரையிலான எடையுள்ள மருந்துகள் மற்றும் உடல் உறுப்புகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு சேர்க்க முடியும். இந்த ட்ரோனின் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கி.மீட்டர் ஆகும் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எக்ஸ்-ல் பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள், மனப்பாங்கான பகுதிகளில், அவசர தேவையான மருத்துவ உதவிகளை அந்தப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்தச் சவாலுக்குத் தீர்வு காணும் வகையில் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த ட்ரோனை வைத்து இதர பல துறையில் சேவை அளிக்கலாம், உணவு டெலிவரி முதல் ஈகாமர்ஸ் ஷாப்பிங் டெலிவரி வரை செய்ய முடியும். ஆனால் தற்போது யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மருத்துவ உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் மட்டுமே அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.
யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ட்ரோன்களின் திறனை மேம்படுத்த வாய்ப்புள்ளது.

இதன்மூலம் மருத்துவ உதவிகளை மட்டுமல்லாமல், போர்கால அவரச உதவி மற்றும் விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையில் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் விரைவில் முக்கிய இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications