கோவை: தமிழ்நாட்டில் ஐடி நிறுவனங்கள் சென்னை மட்டுமல்லாமல் மற்ற நகரங்களிலும் அலுவலகத்தை திறக்க வேண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் சென்னைக்கு அடுத்தபடியாக பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஐடி அலுவலகங்களை கோயம்புத்தூரில் நிறுவிய வண்ணம் இருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக Tanny Shelters எனப்படும் கோயம்புத்துரை தலைமை இடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் Tanny Infini என்ற பெயரில் ஐடி தொழிலிலும் கால் பதித்திருக்கிறது. இந்த நிறுவனம் கூடிய விரைவில் கோயம்புத்தூரில் சரவணம்பட்டி பகுதியில் மிகப் பெரிய அலுவலகத்தை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

Tanny Shelters என்பது கோவையை தலைமையிடமாக கொண்டு கட்டுமான நிறுவனமாகும். கோவையில் ஆயிரக்கணக்கான மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றி இருக்கும் இந்நிறுவனம் அண்மை காலமாக ஐடி துறையிலும் கால்பதித்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் Tanny Infini Business park என்ற பெயரில் சரவனம்பட்டி காரிடாரில் ஐடி அலுவலகத்தை கட்டமைக்க இருக்கிறது.
4 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரீமியம் ஐடி அலுவலகமாக இது செயல்படும் என டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான ஐடி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அலுவலகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியிலேயே இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.
இது வழக்கமான ஒரு ஐடி பார்க் போல இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்குவது, தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பல்வேறு உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் தான் செயல்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களின் ஜிசிசி கிளைகளைக் கூட கோயம்புத்தூரில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இந்த நிறுவனம் டேனி சிஏஜி என்ற பெயரில் ஒரு ஐடி அலுவலகத்தை கோயம்புத்தூரில் நிறுவி இருக்கிறது. இந்த புதிய ஐடி அலுவலகம் மூலம் கோயம்புத்தூரில் ஐடி சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications