இந்தியாவில் பெரும்பாலான மாநில அரசுக்கு மதுபான விற்பனை மற்றும் அதன் மீதான வரி விதிப்பு ஆகியவை முக்கியமான நிதி ஆதாரமாக விளங்குகிறது. இதில் தமிழ்நாடு அரசும் ஒன்று, இப்படியிருக்கும் வேளையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானத்திற்கான பில்லிங் முறை நெறிப்படுத்தத் தமிழ்நாடு அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
மதுபான விற்பனை மற்றும் பில்லிங்கை வெளிப்படையாக மாற்றவும், ஒழுங்குமுறைப்படுத்தவும், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்), ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் டவுன் பகுதியில் இருக்கும் மொத்தம் 14 டாஸ்மாக் கடைகளில் QR கோடு அடிப்படையிலான பில்லிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய பில்லிங் முறை ஒரு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது, இந்த 14 கடைகளில் தற்போது வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுபானத்திற்குக் கட்டாயம் அச்சிடப்பட்ட பில்களை வழங்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த பில்லிங் முறையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுபானத்தையும், கடைகளுக்கு அனுப்பப்படும் மதுபான எண்ணிக்கையும் இணைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் நிர்வாகம் மதுபானத்தைச் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்ய முடியும் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த பில்லிங் முறையில், பாட்டிலில் அச்சிடப்பட்ட QR கோடு விற்பனையாளர்களால் கையடக்க சாதனத்துடன் ஸ்கேன் செய்யப்படும், இது ஒரு பில்லை உருவாக்கும். ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனி பில்லை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒரு பத்திரிக்கையிடம் பேசுகையில் "இந்த புதிய பில்லிங் அமைப்பை நாங்கள் இரண்டு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த சோதனை முறையில் நாங்கள் பெறும் கருத்துக்களைப் பொறுத்து, தேவைப்பட்டால் பில்லிங் அமைப்பை மறுவடிவமைப்பு செய்வோம். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள், மற்ற டாஸ்மாக் கடைகளும் பில்லிங் முறையை கணினிமயமாக்கப்படும். டாஸ்மாக் தற்போது மாநிலம் முழுவதும் 4,800 ரீடைல் கடைகளை இயக்கி வருகிறது." என அவர் கூறினார்.
டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறையை கணினிமயமாக்கும் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 294 கோடியாகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் மூலதனம் மற்றும் செயல்பாட்டுக்கான செலவுகளை உள்ளடக்கியது.
ரீடெய் ல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தான் டாஸ்மாக் பில்லிங் முறையை கணினிமயமாக்கும் திட்டத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications