சென்னை: தமிழ்நாட்டில் அரசே டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 4787 டாஸ்மார்க் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், துணை விற்பனையாளர் ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழியர்கள்: தமிழ்நாடு முழுவதும் 6567 பேர் மேற்பார்வையாளர்களாகவும் , 14,636 பேர் விற்பனையாளர்களாகவும், 2426 பேர் துணை விற்பனையாளர்களாகவும் வேலை செய்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வந்தனர். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் துணை விற்பனையாளர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

சம்பள உயர்வு: கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியே டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது .ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் டாஸ்மாக் நிர்வாக குழு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கணக்கீடு செய்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஊதிய உயர்வு குறைப்பு: டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலை கூடுதலாக 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் விற்பனை செய்த புகார்களில் சிக்கிய 451 பணியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை வைத்து விற்பனை செய்து விதிமீறலில் ஈடுபட்டதாக 451 ஊழியர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான ஊதிய உயர்வு வெறும் 1000 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
451 பேர் மீது புகார்: மூத்த மேலாளர்கள் அளித்த அறிக்கையின் படி பார்க்கும்போது மொத்தம் 4,467 டாஸ்மாக் ஊழியர்கள் எம்ஆர்பியை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 4,016 பேர் எம்ஆர்பியை விட பத்து ரூபாய்க்கும் கீழ் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தார்களாம், 451 பேர் எம்ஆர்பியை விட 10 ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்பனை செய்திருக்கிறார்களாம். இந்த 451 பேரில் 197 பேர் மேற்பார்வையாளர்கள் என்றும் 234 பேர் விற்பனையாளர்கள் என்றும் 20 பேர் துணை விற்பனையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளம்: இந்த ஊதிய உயர்வு அறிவிப்பின் மூலம் டாஸ்மாக்கில் வேலை செய்யக்கூடிய மேற்பார்வையாளர்கள் இனி மாதத்திற்கு 14 ,518 ரூபாயை சம்பளமாக பெறுவார்கள். விற்பனையாளராக இருக்கும் நபர் 12,476 ரூபாயையும் துணை விற்பனையாளராக இருக்கக்கூடிய நபர் 11,429 ரூபாயையும் சம்பளமாக பெறுவார்.


Click it and Unblock the Notifications