நெதர்லாந்து நாட்டின் நிறுவனமான ASML, உலகின் மிக முக்கியமான செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தை (EUV லித்தோகிராபி மெஷின்) தயாரிக்கும் ஒரே நிறுவனமாகும். இந்த மெஷின்கள் இல்லாமல் தற்போது ஏஐ, டேட்டா சென்டர், கிளவுட், பிளாக்செயின், போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தை பயன்படுத்த முக்கிய தேவையாக இருக்கும் மேம்பட்ட சிப்களை தயாரிக்க முடியாது.
சிப் தயாரிப்பில் கிங்மேக்கராக இருக்கும் TSMC, Intel, Samsung உள்ளிட்ட அனைத்து பெரிய நிறுவனங்களும் ASML-ஐ நம்பி தான் இருக்கின்றன. இந்த நிறுவனம் தற்போது 1700 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இந்தச் செய்தி இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

1700 ஊழியர்கள்
ASML நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டும் 1700 ஊழியர்கள் இவர்கள் உலகின் மிகச் சிக்கலான தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிபுணர்கள். இவர்கள் ASML நிறுவனத்தில் பல்வேறு முக்கியமான பிரிவுகளை பணியாற்றும் நிபுணர்கள் என்பதால் இத்தொழில்நுட்பம், உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றை குறித்து கட்டாயம் புரிதல் இருக்கும்.
மேலும் ஒவ்வொரு EUV மெஷினும் 1,300 கோடி முதல் 1,800 கோடி ரூபாய் வரை விலை கொண்டது. இந்தத் தொழில்நுட்பத்தை சீனா கூட இன்னும் தொட முடியவில்லை. இப்போது இந்த அரிய தொழில்நுட்பத்தில் திறமை கொண்ட 1700 பேரும் வேலை தேடும் நிலையில் உள்ளனர். இந்தியா இவர்களை பணியமர்த்தினால், செமிகண்டக்டர் துறையில் பெரும் முன்னேற்றத்தை இந்தியா பதிவு செய்ய முடியும் என திங்க் ஸ்கூல் பாராஷ் கோத்தாரி தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியா உலகின் மிகப்பெரிய செமிகண்டக்டர் மையமாக மாறும் பாதையை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பெரும் மானியத்துடன் 76000 கோடி ரூபாய் செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு உள்ளதால் இத்துறை வேகமாக வளர்ந்து வருகின்றன.
அதானி, அம்பானி, டாடா குழுமங்கள் ஏற்கனவே இந்தத் துறையில் பெரிய முதலீடுகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் ASML நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படும் 1700 நிபுணர்களை இப்போது பணியமர்த்தினால், இந்தியா செமிகண்டக்டர் துறையில் புரட்சியே செய்யலாம்.

இந்தியாவுக்கு ஏன் இது மிக முக்கியம்?
இந்தியா தற்போது ₹76,000 கோடி செமிகண்டக்டர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் இன்னும் EUV மெஷின் தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்கிறோம். இந்த 1700 நிபுணர்களை பணியமர்த்தினால் இந்தியாவில் சொந்தமாக EUV லித்தோகிராபி தொழில்நுட்பம் உருவாக்க முடியும். செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு தொழில்நுட்ப சார்பு குறையும், இதனால் TSMC மற்றும் Micron போன்ற நிறுவனங்களை நம்பியிருக்க தேவையில்லை. 10-20 ஆண்டுகளில் பில்லியன் டாலர் மதிப்புள்ள IP உருவாக்க முடியும்.
அதானி, அம்பானி, டாடா குழுமங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். 2 மடங்கு சம்பளம், ஈக்விட்டி, உலகத் தரம் வாய்ந்த R&D மையம் என அளித்தால் இந்த நிபுணர்களை எளிதாக ஈர்க்க முடியும். இதை இந்திய வர்த்தக குழுமங்களால் செய்யவும் முடியும், காரணம் அதானி, அம்பானி, டாடா குழுமங்களிடம் பெரும் நிதி ஆதாரம் உள்ளது.
இந்த வாய்ப்பு நீண்டகாலம் நீடிக்காது. சீனா, வியட்நாம் போன்ற நாடுகளும், ASML-க்கு போட்டி நிறுவனங்கள் இவர்களை விரைவில் ஈர்த்துவிடுவார்கள். இந்த 1700 பேரும் சிதறிவிடும் முன், இந்திய நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இந்த முயற்சி நாளைக்கே பலன் அளிக்குமா என்றால் இல்லை, அது 10-20 வருட பயணம்.
இந்தியாவில் ஏற்கனவே டாடா குழுமம் செமிகண்டக்டர் துறையில் OSAT பிரிவில் இயங்கி வருகிறது, அதானி, அம்பானி குழுமமங்கள் டீப் டெக் துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தும் வேளையில் இந்த முயற்சி மிகவும் எளிதாக வெற்றி அடையும் வாய்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications