சென்னை: டாடா மோட்டார்ஸ் செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் டாடா கேப்பிடல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் நிர்வாக குழுக்கள் இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) திட்டத்தின் கீழ் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தை டாடா கேப்பிடலுடன் இணைக்கப்பட உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் ஆட்டொமொபைல் துறை வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் முடிவைத் தொடர்ந்து பிற வணிகங்களில் இருந்து வெளியேற முடிவு செய்தது. இதேபோல் டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் அனைத்து நிதி சேவை வர்த்தகத்தையும் ஒரு குடைக்குள் கொண்டும் வரும் முயற்சியில் இந்த இணைப்பை அறிவித்தது.
டாடா மோட்டார்ஸ் நிதி சேவை பிரிவில் இருந்து மொத்தமாக வெளியேறுவதன் மூலம் தனது முதலீட்டை புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளில் முதலீடு செய்யவும், அதன் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனத்தைச் செலுத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இணைப்பின் மூலம் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் பங்குதாரர்களுக்கு டாடா கேப்பிடல் அதன் பங்குகளை வழங்கவுள்ளது. இதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸ் சுமார் 4.7% பங்குகளைப் பெற உள்ளது.
டாடா கேப்பிடல் ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களில் (NBFC) ஒன்றாகும். இது சில்லறை, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளில் 25 க்கும் மேற்பட்ட ப்ராடெக்ட்களை வழங்குகிறது.
மறுமுனையில் ரூ.32,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் முதன்மையாக புதிய மற்றும் பழைய வணிக வாகனங்கள் (CV), பயணிகள் வாகனங்கள் (PV), டீலர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான நிதி உதவிகளை வழங்குகிறது.
2024 நிதியாண்டில், டாடா கேப்பிடல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் ரூ.3,150 கோடி மற்றும் ரூ.52 கோடி லாபத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பு மூலம் அதன் பழைய, புதிய வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை, இதேபோல் சேவையும் பாதிக்காது. இந்த இணைப்பு மூலம் கூடுதல் விரிவாக்கத்தைச் சாத்தியப்படுத்த முடியும்.
டாடா கேப்பிடல் இதற்து முன்பு வாகனங்கள் கடன் வழங்குவதில் மிகவும் குறைந்த அளவிலான பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது. இந்த இணைப்பு மூலம், வேகமாக வளர்ந்து வரும் வணிக வாகனங்கள் / பயணிகள் வாகன கடன் பிரிவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் வாய்ப்பை டாடா கேப்பிடல பெறும்.
இந்த இணைப்புக்கான திட்டம் பங்குச் சந்தை ஒழுங்குமுறை (SEBI), ரிசர்வ் வங்கி (RBI), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) உட்பட பல்வேறு அமைப்புகளின் ஒப்புதல் தேவை. டாடா கேப்பிடல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இந்த ஒப்புதல்களை அடுத்த 9-12 மாதத்தில் பெற்று வர்த்தகத்தை இணைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications