கடலூர்: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமாக டாடா தொழில் குழுமம் செயல்பட்டு வருகிறது பல்வேறு நிறுவனங்கள் இதன் கீழ் இயங்குகின்றன . ஐடி, வாகன உற்பத்தி, பேஷன் என இந்த குழுமம் கால்பதித்த அனைத்து துறைகளிலுமே வெற்றி தான்.
டாடா குழுமத்துக்கு சொந்தமான முக்கிய நிறுவனம் டாடா கெமிக்கல்ஸ். இந்த நிறுவனம் சிமெண்ட், நானோ ஆக்சைடு , சோடியம் பை கார்பனேட், சிலிக்கா உள்ளிட்ட ரசாயனங்களை உற்பத்தி செய்கிறது.டாடா கெமிக்கல்ஸ் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலும் , குஜராத்தின் மிதாப்பூர் பகுதியிலும் டாடா கெமிக்கல் ஆலையை நிறுவி இருக்கிறது .

கடலூரில் உள்ள ஆலை டாடா கெமிக்கல்ஸின் முக்கிய ஆலை என கூறலாம். இதற்கிடையே டாடா கெமிக்கல் நிறுவனத்தின் வாரிய இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளின் உற்பத்தி திறன் விரிவாக்கத்திற்காக 910 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.
இதன்படி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு குஜராத் மாநிலத்தின் சோடா சாம்பல் ஆலையில் உற்பத்தி திறனை விரிவு படுத்துவதற்காக 135 கோடி ரூபாய் முதலீட்டை அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிலிக்கா உற்பத்தி ஆலையில் உற்பத்தி திறனை விரிவு படுத்துவதற்காக கூடுதலாக 775 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போது கடலூரில் உள்ள சிலிக்கா உற்பத்தி ஆலையில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 13.8 கிலோ டன்கள் சிலிக்கா உற்பத்தி செய்கிறது . இதனை அடுத்த 27 மாதங்களுக்குள் ஆண்டுக்கு 50 கிலோ டன்கள் என உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக தான் ஆலையை விரிவாக்கம் செய்வதாக டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே கம்பெனியிடம் இருக்கும் நிதி மட்டும் இல்லாமல் வெளியிலிருந்தும் நிதி திரட்டி இந்த முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாக டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடலூரில் செயல்படும் ஆலையை டாடா நிறுவனம் விரிவாக்கம் செய்கிறது என்றால் நிச்சயம் மாவட்டத்தின் தொழில் திறனையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்துதோடு மட்டுமில்லாமல் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க போகிறது.
இதன் மூலம் கடலூர் ஆலை டாடா கெமிக்கல்ஸின் முக்கியமான உற்பத்தி மையமாக மாற இருக்கிறது.டாடா கெமிக்கல்ஸ் ஆலை விரிவாக்கம் கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. எனவே இளைஞர்கள் ரெஸ்யூமை தயார் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications