மும்பை: இந்தியாவில் Ready to drink எனப்படும் பாட்டில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம் உண்டு. சிறு பாக்கெட்டுகளில் தொடங்கி பாட்டில்கள் வரை இவற்றின் விற்பனை களைகட்டுகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சந்தையில் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை விற்பனை செய்கின்றன. வழக்கம் போல முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஒரு நிறுவனம் இந்த துறையிலும் கால் பதித்து போட்டியாளர்களை கதி கலங்க வைத்துள்ளது.
டாடா கன்சியூமர்ஸ் நிறுவனம் தற்போது பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களுக்கான சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி நிறுவனத்துக்கு சொந்தமான கேம்ப கோலா கடுமையான போட்டியாக இருக்கிறது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களுக்கான சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என கூறும் டாடா கன்சியூமர்ஸ் இந்த துறையில் போட்டியும் அதிகமாகியுள்ளது என தெரிவிக்கிறது.

டாடா கன்சியூமர்ஸை பொறுத்தவரை டாடா குளுக்கோ ப்ளஸ், ஹிமாலயன் நேச்சுரல் மினரல் வாட்டர் ,டாட்டா ரஸ்கி, டாடா காப்பர் உள்ளிட்ட பெயர்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை விற்பனை செய்கிறது . தற்போது இந்த பிரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிக்கு சொந்தமான கேம்ப கோலாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதாக டாடா கன்சியூமர்ஸ் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. டாடா கன்சியூமஸ் நிறுவனத்தின் ரெடி டூ டிரிங்க் பிசினஸ் பிரிவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11% வரை வருவாய் சரிவை கண்டுள்ளது.
இதற்கு மோசமான வானிலை சூழல்கள் மற்றும் போட்டி நிறுவனங்களின் குறைந்த விலை கொண்ட பானங்கள் ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கேம்ப கோலாவுடன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் கடுமையாக போட்டியிட வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்ப கோலா நிறுவனத்தை வாங்கியது . தற்போது சந்தையில் கோக கோலா, பெப்சிகோ நிறுவனங்கள் தங்களின் 250 ml பானங்கள் கொண்ட பாட்டிலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது கேம்ப கோலா 200 ml கொண்ட பாட்டிலை 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் குறைந்த விலை கொண்ட கேம்ப கோலாவின் பானங்களையே வாங்கி அருந்துகின்றனர். இது மற்ற நிறுவனங்களின் விற்பனையை கணிசமாக பாதித்துள்ளது. இதன் காரணமாக அண்மையில் டாடா நிறுவனம் தங்களின் குளுக்கோ பிளஸ் -இன் விலையை குறைத்தது. இந்தியாவில் இது போன்ற சாஃப் டிரிங்குகளான சந்தை மதிப்பு 4.6 பில்லியன் டாலர்களாகும்.
Written by: Devika


Click it and Unblock the Notifications