இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத் துறையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து கடந்த 2 வருடங்களாக அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இக்குழுமத்தில் இருக்கும் அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது சேர்த்தது.
இதைத் தொடர்ந்து ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வந்த டாடா கன்ஸ்யூமர் நிறுவனப் பங்குகள் கொரோனா பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் சுமார் 226 ரூபாய் வரையில் சரிந்தது. ஆனால் இன்று பிக் பேஸ்கட் உடனான ஒப்பந்தம் மூலம் 52 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது.
டாடா - பிக்பேஸ்கட் டீல்
டாடா குழுமம் சீனாவின் அலிபாபா முதலீட்டில் இயங்கும் பிக்பேஸ்கட் நிறுவனத்தைக் கைப்பற்றும் விதமாக, இந்நிறுவனத்தின் 65 சதவீத பங்குகளைச் சுமார் 9000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகத் தகவல் நேற்று மாலை வெளியானது. இதன் எதிரொலியாக இன்று டாடா கன்ஸ்யூமர் பங்குகள் அதிரடி வளர்ச்சியின் காரணமாக 52 வார உயர்வை அடைந்துள்ளது.
டாடா கன்ஸ்யூமர் பங்குகள்
புதன்கிழமை காலை வர்த்தகத்தில் உயர்வு உடன் டாடா கன்ஸ்யூமர் பங்குகள் 636 ரூபாயில் துவங்கியது, வர்த்தகம் சந்தை துவங்கிய சில நிமிடத்தில் 645.70 ரூபாய் என 52 வார உயர்வையும் வரலாற்று உச்சத்தையும் அடைந்தது. இதனால் டாடா கன்ஸ்யூமர் பங்குகளில் முதலீடு செய்தோர் அதிகளவிலான லாபத்தை அடைந்தனர்.
583.20 பில்லியன் ரூபாய்
இதேவேளையில் டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சியின் காரணமாக இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 583.20 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் வரும் நிப்டி நிறுவன மறுசீரமைப்பில் 50 நிறுவனங்கள் பட்டியலில் கெயில் வெளியேறவும் டாடா கன்ஸ்யூமர் இப்பட்டியலுக்குள் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
டாடா-வின் சூப்பர் ஆப்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரீடைல் வர்த்தகச் சந்தையில் டாடா குழுமம் தற்போது பல்வேறு திட்டங்களுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக டாடா-வின் சூப்பர் ஆப் தளத்தில் மளிகை பொருட்கள், ஆடை முதல் நிதியியல் சேவை வரையில் அனைத்து விதமான சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு சேவை தளமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
அமேசான் - ஜியோமார்ட் - பிளிப்கார்ட்
இந்தச் சூப்பர் ஆப் மூலம் இந்திய ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் தளத்தில் வேகமாக வளர்ந்து வரும் அமெரிக்க நிறுவனமான அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட், அமெரிக்காவின் வால்மார்ட் குழுமத்தின் இந்திய வர்த்தகப் பிரிவான பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் டாடா நேரடியாகப் போட்டிப்போடும் அளவிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications