டாடா குழுமத்தின் எதிர்காலத்தை திர்மாணிக்கும் முக்கிய வர்த்தக பிரிவாக விளாங்கும் டாடா டிஜிட்டல் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்யாத நிலையில் அடுத்தடுத்து பல பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் டாடா டிஜிட்டல் பிரிவின் வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளத்தை அமைக்கும் திட்டத்துடன் மும்பை ஊழியர்களை பெங்களூருக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
டாடா டிஜிட்டல் நிறுவனம் மும்பையில் உள்ள தனது அலுவலகத்தை ஃபோர்ட் பகுதியில் உள்ள ஃபோர்ட் ஹவுஸிலிருந்து லோயர் பரேல் பகுதியில் உள்ள ஒன் இன்டர்நேஷனல் சென்டருக்கு (OIC) மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த இடமாற்றம் ஜூலை மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஃபோர்ட் பகுதியில் உள்ள ஆறு மாடி அலுவலகத்திற்கு டாடா டிஜிட்டல் மாதம் 3 கோடி ரூபாய் வாடகை செலுத்துகிறது. ஆனால், புதிய மூன்று மாடி அலுவலகத்திற்கு மாதம் 1 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும், இதனால் மாதம் 2 கோடி ரூபாய் சேமிக்கப்படும். இதேவேளையில் அலுவலக இடமும் குறைக்கப்பட உள்ளதால் மும்பை ஊழியர்களை பெங்களூருக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
டாடா டிஜிட்டலின் தலைமை நிர்வாகி (CEO) நவீன் தஹில்யானி கடந்த வாரம் திடீரென பதவி விலகியுள்ளார். அவர் லோயர் பரேல் பகுதியில் வசிப்பவர் என்பதால், அலுவலகம் அவரது வீட்டிற்கு அருகில் மாற்றப்பட்டிருந்தால் பயண நேரம் குறைந்து, பணியில் அதிக நேரம் செலவிட முடியும் என சந்தையில் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால், நவீன் தஹில்யானி சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாகவும், மீண்டும் இன்சூரன்ஸ் துறையில் இருக்கும் வெளிநாட்டு நிறுவன பணியில் சேர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இவருக்காக டாடா நிர்வாகம் அலுவலகத்தை மாற்ற வாய்ப்பில்லை. இதேவேளையில் புதிய தலைமை நிர்வாகியை நியமிப்பது குறித்து டாடா டிஜிட்டல் இதுவரை முடிவு செய்யவில்லை.
டாடா டிஜிட்டல் நிறுவனம் மும்பையில் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய அலுவலகத்தை கொண்டுள்ளது. ஆனால், புதிய அலுவலகம் சிறியதாக இருப்பதால், அனைத்து ஊழியர்களையும் ஒரே இடத்தில் அமர வைப்பது சாத்தியமில்லை.
இதை தவிர்க்க, நிறுவனம் ஊழியர்களுக்கு பெங்களூருக்கு இடமாற விருப்பம் அளித்துள்ளது. மும்பையில் உள்ள பல தொழில்நுட்ப ஊழியர்கள் இந்த வாய்ப்பை ஏற்று பெங்களூருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். பெங்களூருக்கு செல்லும் டாடா டிஜிட்டல் ஊழியர்களுக்கு இது ஜாபாட் ஆக பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) வினய் வைத்யா பெங்களூரில் இருந்து தான் பணியாற்றி வருகிறார். இதனால் மும்பை அலுவலகத்தில் இருந்து பெங்களூருக்கு மாறும் டெக் ஊழியர்கள் CTO உடன் நெருக்கமாக பணியாற்ற முடியும்.
வினய் வைத்யா முன்பு அமேசான் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதால் டாடா டிஜிட்டல் பிரிவின் டெக் பிரிவை வேகமாக மேம்படுத்தி வருகிறார். பெங்களூரு இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக உள்ளது, இதோடு டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் சக போட்டியாளரான ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்விகி, ஜெப்டோ போன்ற முக்கிய போட்டியாளர்கள் இங்கு உள்ளதால் டாடா டிஜிட்டலின் எகோசிஸ்டம் வேகமாக மேம்படும்.


Click it and Unblock the Notifications