விவோ நிறுவனத்தின் இந்திய வணிகத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக சொல்லப்பட்டு, தற்போது டாடா அந்த திட்டத்தை கைவிட்டு இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, டாடா குழுமம் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான விவோவின் இந்திய வணிகத்தை வாங்கும் முடிவினை கைவிட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் போன் நிறுவனமான விவோ , விவோ இந்தியா என்ற பெயரில் இங்கே ஸ்மார்ட் போன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இது சீன நிறுவனம் என்பதால் அரசின் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. எனவே இந்த நிறுவனத்தில் கணிசமான அளவு இந்தியாவை சேர்ந்த நிறுவனம் முதலீடு செய்து பங்குகளை வாங்க வேண்டும் என அரசு நிர்பந்தம் செய்தது. அந்த வகையில் விவோ இந்தியாவின் 51% பங்குகளை டாடா குழுமம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதன் மூலம் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் டாடா நிறுவனத்தின் கட்டுக்குள் வரும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது டாடா நிறுவனம் அந்த முடிவினை கைவிட்டிருப்பதாக தெரிகிறது. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்ததே காரணம் என சொல்லப்படுகிறது.
தற்போது டாடா குழுமம் சார்பாக பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தங்களது போட்டியாளராக இருக்கக்கூடிய விவோ உடன் டாடா குழுமம் ஒப்பந்தம் செய்வதில் விருப்பமில்லை என ஆப்பிள் கூறியதாக தெரிகிறது. எனவே தான் டாடா நிறுவனம் இந்த முடிவினை கைவிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விவோவை வாங்குவது தொடர்பான முடிவினை பரிசீலனை செய்வது தற்போது சாத்தியம் இல்லை என டாடா குழுமத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு சீன நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் விவோ நிறுவனம் கணிசமான அளவு பங்குகளை கொண்டுள்ளது. ஆனால் இது சீன நிறுவனமாக இருப்பதால் மேக் இன் இந்தியா உள்ளிட்ட அரசு வழங்கக்கூடிய எந்த திட்டங்களிலும் சலுகைகளை பெற முடியவில்லை.
எனவே மத்திய அரசு விதிமுறைகளின் படி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் இதில் கணிசமான அளவு முதலீட்டினை செய்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் விவோ நிறுவனம் இந்தியாவை சேர்ந்த தொழில் குழுமங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications