இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கிய சக்தியாக இருக்கப்போவது செமிகண்டக்டர் தான், இத்துறைக்கான PLI திட்டத்தில் டாடா குழுமம் ஒப்புதல் பெற்ற நிலையில் தற்போது செமிகண்டக்டர் சிப் பேகேஜ்-களை ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது.
இது இந்திய செமிகண்டக்டர் துறையில் முக்கிய வளர்ச்சி படியாக பார்க்கப்படுகிறது. டாடா குழுமம் வெளிநாட்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்தியாவில் சிலிக்கான் வேஃபர் தயாரிப்பு தொழிற்சாலையும், OSAT தொழிற்சாலையை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில், நடுவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஒரு தரமான சம்பவம் செய்துள்ளது.

ஓசூரில் பிரம்மாண்ட தொழிற்சாலையை வைத்திருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூரில் தனது பிரத்தியேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வைத்துள்ளது. இந்த R&D சென்டரில் இருக்கும் சோதனை தயாரிப்பு தளத்தில் இருந்து பேக்கேஜ் செய்யப்பட்ட செமிகண்டக்டர் சிப்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிலிக்கான் வேஃபர் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிலிக்கான் வேஃபர்-ஐ முறையாக பேகேஜ் செய்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தைப் பெரிய அளவில் துவங்குவதற்கு முன்பாக பெங்களூரில் தனது R&D சென்டரில் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிபெற்ற நிலையில் பேகேஜ் செய்யப்பட்ட செமிகண்டக்டர் சிப்-களை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தனது முக்கிய கூட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம் அசாமில் உள்ள Morigaon என்ற இடத்தில் புதிய சிப் பேக்கேஜிங் தொழிற்சாலையும், குஜராத்தில் உள்ள தோலேரா (Dholera) என்ற இடத்தில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான சிப் ஃபவுண்ட்ரியையும் அமைப்பதற்கான பணிகளை டாடா குழுமம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சோதனை ஓட்டம் மற்றும் ஏற்றுமதி நடந்துள்ளது.
இதன் மூலம் அசாம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே மிகப்பெரிய வாடிக்கையாளர் பட்டியலை உருவாக்கவும், சப்ளை செயினை மேம்படுத்தவும் டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது பேகேஜ் யூனிடில் 28, 40, 55, 65 நேனோ மீட்டர் (nm) செமிகண்டக்டர் சிப்களில் டேப்-அவுட் (Tape-out) செய்வதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. இதேபோல் சில உயர்தர நோடு சிப்களிலும் இதை சாத்தியப்படுத்தியுள்ளது டாடா எலக்ட்ரானிக்ஸ்.


Click it and Unblock the Notifications