இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும், தயாரிப்பிலும் வேகமாக வளர்ந்து வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான் நிறுவனத்தை ஓரம்கட்டும் வகையில் உற்பத்தி கட்டமைப்பை விரிவாக்கம் செய்யும் வகையில் ஓசூரில் தொடர்ந்து விரிவாக்க பணிகளைச் செய்து வருகிறது.
சமீபத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ், பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையைக் கைப்பற்றியதன் மூலம், நாட்டின் முதல் முழு ஐபோன் அசம்பிளி நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ஐபோன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

இதன் படி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் இருக்கும் தனது மாபெரும் உற்பத்தி தளத்தை மேலும் விரிவாக்கம் செய்ய புதிய நிலத்தில் கட்டுமான பணிகளைத் துவங்கியுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2 லட்சம் ஐபோன்களை தயாரிக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே ஓசூரில் விரிவாக்க பணிகளைச் செய்து வரும் வேளையில், தற்போது அங்கு மிகப்பெரிய டவுன்ஷிப் கட்ட உள்ளது. ஓசூரில் இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை சுமார் 22.51 லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விரிவாக்க பணிகளுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் சுமார் 4740 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்வதாக அறிவித்திருந்தது. இந்த முதலீட்டின் வாயிலாக 45000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் இந்த விரிவாக்க பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டவை என்றால் இதற்கான பணிகளை வேகமாக செய்யத் துவங்கியுள்ளது.
இதேபோல் திருச்சி மணப்பாறை சிப்காட்-ல் டாடா ப்ராஜெக்ட்ஸ் கைப்பற்றி இருந்த நிலத்தைத் திரும்பவும் அரசிடம் கொடுத்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில் தற்போது GMR SEZ பகுதியில் 2வது இடத்தில் இந்த விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு துறைக்கு சீனாவில் இருந்து வெளியேறிய வர்த்தகம் இந்தியாவிற்கு வந்தாலும் பெரும்பாலான வர்த்தகம் தைவான், கொரியா நாட்டின் கிளை நிறுவனங்களுக்குத் தான் சென்றுள்ளது.

இத்துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த டாடா குழுமம் 2 வருடங்களுக்கு முன்பே ஓசூரில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கான அசம்பிளி தொழிற்சாலையை அமைத்தது.
இந்தத் தொழிற்சாலையில் அதிகளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கப்பட்டாலும் பெரும்பகுதி வேலைவாய்ப்பு வெளி மாநிலத்தவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications