டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் துறையில் தன்னுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஏஎஸ்எம்பிடி: சிங்கப்பூரை சேர்ந்த ஏஎஸ்எம்பிடி(ASMPT) நிறுவனத்துடன் இணைந்து செமிகண்டக்டர் அசம்பிள் உள்கட்டமைப்பை நிறுவுவதற்காகவும், சிப் பேக்கேஜிங் யூனிட்டுகளை நிறுவுவதற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி அசாம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் டாடா எலக்ட்ரானிக்ஸ் சார்பாக செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.

ஏஎஸ்எம்பிடி நிறுவனம் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு செமிகண்டக்டர் அசம்பிளி, அவற்றை பரிசோதித்துப் பார்ப்பது உள்ளிட்டவற்றுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க உள்ளது. இதோடு இன்ஜினியரி இன்பரா, ஆட்டோமேஷன் முறைகளுக்கு தேவையான பொருட்கள் , ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் என பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செமிகண்டக்டர் அசம்பிளி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும், கர்நாடக மாநிலம் வேமகல் மற்றும் அசாம் மாநிலம் ஜகீரோடு பகுதியில் அமைந்துள்ள ஆலைகளில் செமிகண்டக்டர்களை பரிசோதனை செய்வதற்கும் ஏஎஸ்எம்பிடி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அசாம் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செமிகண்டக்டர் அசம்பிளி ஆலையை நிறுவி வருகிறது. இது அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. அதே வேளையில் கர்நாடக மாநிலத்திலும் சிறிய அளவிலான ஒரு சிப் பொருத்தும் ஆலையை நிறுவியுள்ளது .
டோக்கியோ எலக்ட்ரான்: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனத்துடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள தங்களுடைய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் டாடா எலக்ட்ரான் நிறுவன ஊழியர்களுக்கு செமிகண்டக்டர் உற்பத்திக்கு தேவையான பயிற்சியை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் முன்னணி செமிகண்டக்டர் விநியோகஸ்தராக டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தோடு டாடா எலக்ட்ரானிக்ஸ் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை குஜராத் மாநிலத்தில் தங்களுடைய முதல் செமிகண்டக்டர் ஆலையை நிறுவி வருகிறது. இதற்காக 91,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதேபோல அசாம் மாநிலத்தில் செமிகண்டக்டர்களை பொருத்துவது மற்றும் சோதனை செய்யும் ஆலையை 27 ,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவி வருகிறது.
தங்களுடைய செமிகண்டக்டர்கள் ஆலையில் தயாரிக்கப்படும் சிப்புகள் வாகனங்கள், மொபைல் கருவிகள் , செயற்கை நுண்ணறிவு கருவிகளில் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications