இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான
டாடா குழுமம் தனது கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வோல்டாஸ் நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்களின் வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம் சமீபத்தில் அதிகப்படியான முதலீட்டைச் செய்து விரிவாக்கம் செய்யும் பணியில் இருக்கும் வேளையில், பிஸ்லெரி, ஹால்திராம்ஸ் போன்ற நிறுவனங்களை வாங்க முயற்சி செய்து கடைசி நேரத்தில் ஜம்ப் அடித்தது. ஆனால் இரண்டு விஷயத்திலும் இதன் வர்த்தகத்தை வாங்குவதாக எவ்விதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை என விளக்கம் கொடுத்தது.

இப்போது டாடா குழுமம் வோல்டாஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவை விற்பனை செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பொருளாதார மந்த நிலையின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
டாடா குழுமம் வோல்டாஸ் நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்களின் வர்த்தகத்தை, இந்தப் போட்டி நிறைந்த சந்தையில் அதன் பிஸ்னஸ்-ஐ அதிகரிப்பதில் அதிகப்படியான சவால்கள் இருப்பதாகக் கருதும் நிலையில் தற்போது இப்பிரிவை மொத்தமாக விற்க திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் டாடா குழுமம் தற்போது வோல்டாஸ் நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்களின் வர்த்தகத்தின் விற்பனை குறித்துப் பேசி வருவதாகக் கூறப்படும் வேளையில் இந்த விற்பனையில் Arcelik AS உடனான டாடா குழுமத்தின் இதன் உள்ளூர் கூட்டணியும் விற்கப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் துவக்க நிலையில் மட்டுமே இருக்கும் காரணத்தால், இந்த முடிவில் இருந்து பின்வாங்கி அடுத்த சில காலம் அதன் வர்த்தகத்தை வைத்திருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. வோல்டாஸ் நிறுவன பங்குகள் இன்று 1.50 சதவீதம் சரிந்து 814.95 ரூபாயாக உள்ளது. இந்த வருடத்தில் மொத்தமாக 1.53 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
6 செப்டம்பர் 1954 அன்று மும்பையில் டாடா சன்ஸ் மற்றும் வோல்கார்ட் பிரதர்ஸ் கூட்டணியில் வோல்டாஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் தற்போது நோயல் டாடா தலைமையில் இயங்கி வருகிறது, மேலும் பிரதீப் பக்ஷி நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
வோல்டாஸ் நிறுவனம் ஏசி, ஏர் கூலர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிஷ்வாஷர், மைக்ரோவேவ், ஏர் ப்யூரிபையர் உள்ளிட்ட பொருட்களைச் சொந்தமாக வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்கிறது. வோல்டாஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஏர் கண்டிஷனிங் வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் முன்னணி நிறுவனமாகும்.
இதோடு வோல்டாஸ் மற்றும் Arcelik கூட்டணியில் Voltas Beko பிராண்டின் கீழ் பல ஹோம் அப்ளையன்ஸ் விற்கப்படுகிறது. இந்த நிலையில் டாடா குழுமம் வோல்டாஸ் நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்களின் வர்த்தகத்தை விற்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications