தமிழ்நாட்டில் கடந்த 5 வருடமாக டாடா குழுமம் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா குழுமத்தின் 90000 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் தொழிற்சாலை தமிழ்நாட்டுக்கு வராமல் போனது பெரும் ஏமாற்றமாகவே விளங்குகிறது.
இந்த தொழிற்சாலை திருச்சியிலோ அல்லது கோயம்புத்தூரிலோ வரும் எனப் பல கணிப்புகள் வெளியானது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் டாடா குழுமம் தனது செமிகண்டக்டர் தொழிற்சாலையைக் குஜராத் மற்றும் அசாம் மாநிலத்தில் அமைப்பதாக அறிவித்தது. இதற்கு மத்திய அரசிடம் ஒப்புதலும் பெற்றது.

இந்த நிலையில் டாடா செமிகண்டக்டர் திட்டத்தின் ஒரு பகுதி மட்டும் கேரள மாநிலத்தில் அமைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டும் கேரளாவுக்கு வந்தால் அம்மாநில தொழிற்துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய திருப்பமாக அமையும். இந்த மாபெரும் 90000 கோடி ரூபாய் செமிகண்டக்டர் திட்டத்தில் ஒரு துணை ஆலை மட்டும் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுர் அருகே ஓழூர் என்னும் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் அமைக்கப்படும் ப்ரைமரி செமிகண்டக்டர் ஆலைக்கு இணையாக இந்த துணை ஆலை செயல்பட உள்ளது. இதன் மூலம், கேரள மாநிலம் முதன் முதலாக செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் அடியெடுத்து வைக்கும் முக்கிய வாயப்பை பெற்றுள்ளது. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் அளித்த பேட்டியின் அடிப்படையில் இந்த தகவலை மலையாள பத்திரிக்கையான மாத்ருபூமி வெளியிட்டுள்ளது.
செமிகண்டக்டர் ஆலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் கேரள அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக அம்மாநில தொழில் துறை அமைச்சர் பி. ராஜீவ் தலைமையில் முக்கியமான அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு இப்பேச்சுவார்த்தையை நடத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் அமைக்கப்படும் இந்த தொழிற்சாலை, டாடா குழுமம் தனது முக்கிய கூட்டணி நிறுவனமான தைவான் நாட்டை சேர்ந்த Powerchip Semiconductor Manufacturing Corporation இணைந்து அமைக்கும். இக்கூட்டணியில் முதன்மை செமிகண்டக்டர் ஆலை குஜராத்திலும், செக்ண்டரி ஆலை அசாமிலும் அமைக்கப்பட இருந்தாலும், மலப்புரத்தில் அமைக்கப்படவுள்ள துணை ஆலை, செமிகண்டக்டர் சிப் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.
டாடா குழுமம் - தைவான் நாட்டை சேர்ந்த Powerchip Semiconductor Manufacturing Corporation இணைந்து இந்தியாவில் செயல்படுத்தும் 90000 கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் நாட்டில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications