இந்தியாவில் முன்னணி செல்போன் விற்பனையாளர்களில் ஒன்றான விவோ இந்தியா நிறுவனம், அதன் இந்திய தொழிற்சாலையின் கணிசமான பங்குகளை டாடா குழுமம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ (vivo) இந்தியாவில் கணிசமான சந்தையை ஆக்கிரமித்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் முன்னணியில் இருந்தாலும் இது சீன நிறுவனமாக இருப்பதால் செல்போன் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உள்ளூர் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக விவோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் செயல்படக்கூடிய நிறுவனங்களோடு இணைந்து தங்களது தொழிலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நொய்டாவில் இருக்கக்கூடிய உற்பத்தி ஆலையை மைக்ரோமேக்ஸின் தாய் நிறுவனத்திடம் ஒப்படைக்க vivo முடிவு செய்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக செயல்படுவதற்கான விண்ணப்பங்களை விவோ இந்தியா மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதனிடையே விவோ இந்தியாவில் கணிசமான பங்குகளை டாடா குழுமம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. டாடா குழுமம் வழங்க இருப்பதை விட அதிக அளவிலான தொகையை விவோ நிறுவனம் கேட்பதாகவும் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. இருப்பினும் நிறுவனத்தில் இந்த கணிசமான பங்குகளை வாங்குவதில் டாடா குழுமம் ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.
மணிகண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து விவோ மற்றும் ஓப்போ நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தான் விவோவின் உற்பத்தி ஆலையை மைக்ரோமேக்ஸ் தாய் நிறுவனமான பாக்வதி புராடெக்ஸிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பாக்வதி புராடெக்ஸ் நொய்டா பகுதியில் விவோ ஆலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விவோ ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வழங்கும் என்றும் இதற்காக அரசு வழங்கக்கூடிய மானியங்களை விவோ நிறுவனத்திடம் ஒப்படைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெக்சோன் ஐடி பார்க் இல் வைத்திருந்த உற்பத்தி ஆலையின் குத்தகையை தான் தற்போது பாகவதி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. விவோ சீன நிறுவனமாக இருப்பதால் இந்தியாவில் இருக்கக்கூடிய நிறுவனங்களோடு இணைந்து கூட்டு நிறுவனமாக மாறி செயல்பட்டால் மட்டுமே அரசின் சலுகைகள் அதற்கு கிடைக்கும். மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் படி இந்தியாவை சேர்ந்த நிறுவனம் 51% பங்குகளை கொண்டிருந்தால் மட்டுமே அது கூட்டு நிறுவனமாக அறிவிக்கப்படும்.
எனவே டாடா குழுமம் கூடிய விரைவில் விவோ நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனாவின் ஆதிக்கம் இந்த பிராண்டில் குறையும் என மத்திய அரசு கருதுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications